/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரியப்பாளையம் மேம்பாலம் பணி நிறைவு
/
ஆரியப்பாளையம் மேம்பாலம் பணி நிறைவு
ADDED : ஜூலை 15, 2024 02:14 AM

வில்லியனுார்: ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலம் பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
புதுச்சேரி - விழுப்புரம் இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள சங்கராபரணி ஆற்றுப்பாலம் பணியை கடந்த 2022 பிப்., 11ம் தேதி முன்னாள் கவர்னர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.
ரூ. 68 கோடி செலவில் ஆற்றில் புதிய மேம்பாலம் அமைத்தல்,பாலத்தில் வடமங்கலம் பகுதி துவங்கி எம்.என்.குப்பம் வரையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்தன.
அதேபோல் பாலத்தில் ஆரியப்பாளையம் பகுதி துவங்கி சாலை அகலப்படுத்துதல், வில்லியனுார் பைபாஸ் எம்.ஜி.ஆர்., சிலை முதல் இந்திரா சதுக்கம் வரை சாலையினை அகலப்படுத்தி இருபுறமும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி, சென்டர் மீடியன் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளன.
ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றில் அமைக்கப்படும் புதிய மேம்பாலத்தில்17 பில்லர்கள் அமைத்து, மழை காலங்களில் தடையின்றி வெள்ள நீர் செல்லும் வகையில் உயர்த்தி அமைக்கப் பட்டுள்ளது.
பாலத்தின் இரு பகுதியிலும் தடுப்பு சுவர்கள் அமைத்து,தார் சாலை போடும் பணி தயார் நிலையில் உள்ளது. ஓரிரு நாட்களில் இணைப்பு சாலையில் தார் சாலை போட்டு, புதிய பாலத்தில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களைசோதனை ஓட்டமாக இயக்க உள்ளனர்.
தொடர்ந்து மேம்பாலம் உறுதி தன்மை அறிந்த பின்னரே,தேசிய நெடுஞ்சாலை துறை, மாநில அரசுடன்கலந்துபேசி திறப்பு விழாவிற்கான தேதியை அறிவிக்கும்.