/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜி பே மூலம் லஞ்சம் பெற்ற ஏ.எஸ்.ஐ., ஆதாரத்துடன் டி.ஐ.ஜி.,யிடம் புகார்
/
ஜி பே மூலம் லஞ்சம் பெற்ற ஏ.எஸ்.ஐ., ஆதாரத்துடன் டி.ஐ.ஜி.,யிடம் புகார்
ஜி பே மூலம் லஞ்சம் பெற்ற ஏ.எஸ்.ஐ., ஆதாரத்துடன் டி.ஐ.ஜி.,யிடம் புகார்
ஜி பே மூலம் லஞ்சம் பெற்ற ஏ.எஸ்.ஐ., ஆதாரத்துடன் டி.ஐ.ஜி.,யிடம் புகார்
ADDED : பிப் 22, 2025 10:32 PM
புதுச்சேரி : பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் புகார் மீது நடவடிக்கை எடுக்க ரூ. 2,000 ஆயிரம் ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய உதவி சப்இன்ஸ்பெக்டர் குறித்து ஆதாரத்துடன் டி.ஐ.ஜி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது.
கொம்பாக்கம், கமலம் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவரது தாய் இந்திரா, கடந்த 2022ம் ஆண்டு கொம்பாக்கம் கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்த 8 சவரன் செயினை மீட்க சென்றபோது, திருடு போய் விட்டதாக தெரிவிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்தும் நகை கிடைக்காததால், கடந்த டிச., மாதம் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில், டி.ஐ.ஜி., சத்திய சுந்தரத்திடம் புகார் மனு அளித்தார்.
2 நாட்கள் கழித்து இன்ஸ்பெக்டர் கண்ணன், பாபுவை அழைத்து விசாரித்தார். நகையை மீட்டு தருவதாகவும், விசாரணை அதிகாரியாக சிறப்பு நிலை உதவி சப்இன்ஸ்பெக்டர் சுப்ரமணி விசாரித்து நடவடிக்கை எடுப்பார் என, கூறினார்.
பாபுவின் புகார் மீது நடவடிக்கை எடுக்க தனது பைக்கிற்கு முதலில் ரூ. 500 பெட்ரோல் நிரப்ப கூறியுள்ளார். அதன்படி பாபு பெட்ரோல் நிரப்பி கொடுத்தார். அதன் பின்பு 10 எண் கொண்ட ஷூ வாங்க ரூ. 1,500 ஜிபே மூலம் பெற்றுள்ளார். எனக்கு வேண்டியதை செய்தால், வழக்கை முடித்து தருகிறேன் என கூறி, தொடர்ந்து பணம் பறிக்கும் செயலில் ஈடுப்பட்டுள்ளார்.
பணம் பறிக்கும் உதவி சப்இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று முத்தியால்பேட்டையில் நடந்த பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் முகாமில் டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணனிடம், தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுச்சேரி பொறுப்பாளர் ஸ்ரீதருடன், பாபு நேரடியாக புகார் அளித்தார்.
உதவி சப்இன்ஸ்பெக்டர் சுப்ரமணிக்கு ஜிபே மூலம் பணம் அனுப்பிய ஆதாரம், சுப்ரமணி 10ம் எண் ஷூ வாங்க பணம் அனுப்ப கூறிய ஆடியோ ஆதாரங்களையும் டி.ஐ.ஜி.,யிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக டி.ஐ.ஜி., உறுதி அளித்தார்.