சபை நிரம்பியது
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் சட்டசபைக்கு வந்திருந்தனர். சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் என அனைவரும் பங்கேற்றனர்.
எங்க வழி... தனி வழி...
எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு வந்தனர். அதுபோல, முதல்வர் ரங்கசாமியை பின் தொடர்ந்து அமைச்சர்கள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அணிவகுத்து வந்தனர். பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு மற்றும் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் தனியாக வந்தனர்.
'எதுவுமே நடக்கல...'
சட்டசபைக்கு வந்த சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு, கடந்த ஆண்டு கவர்னராக இருந்த தமிழிசை சபையில் ஆற்றிய உரை அடங்கிய புத்தகத்தை கையில் ஏந்தியவாறு வந்தார். அந்த புத்தகத்தை நிருபர்களிடம் காண்பித்து, 'கடந்த ஆண்டு கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே நிறைவேற்றவில்லை;எதுவுமே நடக்கவில்லை' என தெரிவித்துவிட்டு சபைக்குள் சென்றார்.
முதல்வரிடம் ஆசி
அமைச்சராக பொறுப்பேற்ற பின் சட்டசபைக்கு வந்த அமைச்சர் திருமுருகன், சபையில் முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றார். பின், தனது இருக்கையில் அமர்ந்தார். அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு அடுத்ததாக அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
கவர்னருக்கு வரவேற்பு
சட்டசபையில் உரையாற்றுவதற்காக, கவர்னர் மாளிகையில் இருந்து கவர்னர் ராதாகிருஷ்ணன் கார் மூலமாக காலை 9:25 மணியளவில் சட்டசபைக்கு வந்தார். அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சபாநாயகர் செல்வம், பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்று சபையின் மைய மண்டபத்துக்கு அழைத்து சென்றார்.
பட்டு வேட்டி... பட்டு சட்டை...
கவர்னர் ராதாகிருஷ்ணன் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து சபைக்கு வந்தார். புதுச்சேரி சட்டசபையில் நேற்று முதன்முறையாக ராதாகிருஷ்ணன் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்து
சட்டசபைக்குள் கவர்னர் வந்து சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தவுடன், தமிழ்த்தாய் வாழ்த்துடன் சபையின் முதல் நாள் அலுவல்கள் துவங்கியது. தொடர்ந்து, கவர்னர் உரையாற்ற துவங்கினார்.
கவர்னர் உருக்கம்
கவர்னர் ராதாகிருஷ்ணன் தனது உரையை துவக்கும்போது, 'நான் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால், இந்த சபையில் இது எனது முதல் உரை மட்டுமல்ல, கடைசி உரையாகவும் இருக்கக் கூடும்' என தெரிவித்தார். அவரது உருக்கமான பேச்சை கேட்டவுடன், சபையில் அமைதி நிலவியது. அனைவரும் கவர்னர் உரையை கவனமாக கேட்க துவங்கினர்.
73 நிமிட உரை
சரியாக 9:27 மணிக்கு கவர்னர் உரையாற்ற துவங்கினார். 10:50 மணிக்கு உரையை நிறைவு செய்தார். அதாவது, 73 நிமிடங்கள் கவர்னர் உரையாற்றினார்.
கவர்னருக்கு வாழ்த்து
உரையை முடித்து கொண்டு 10:55 மணிக்கு கவர்னர் புறப்பட்டார். மகாராஷ்டிரா கவர்னராக பொறுப்பேற்க புறப்பட உள்ளதால், அவருக்கு முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, கவர்னரை சபாநாயகர் செல்வம், சட்டசபை செயலர் தயாளன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். பின், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சபையில் முன்மொழியப்பட்டது.
உரைக்கு இன்று நன்றி
காலை 9:37 மணிக்கு துவங்கிய சட்டசபையின் அலுவல்கள், 11:00 மணியளவில் நிறைவடைந்தது. சட்டசபையில் இன்று காலை 9:30 மணிக்கு துவங்கியதும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடக்கிறது.