/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேளாண் துறைக்கு விருது: முதல்வர் வழங்கல்
/
வேளாண் துறைக்கு விருது: முதல்வர் வழங்கல்
ADDED : ஆக 17, 2024 02:46 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு முதல்வர் விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கடந்த, 2023ம் ஆண்டு பொது விநியோக முறைகளை திறம்படவும், ஊழல் அற்றதாக மாற்றுவதற்காகவும், 'அக்ரிஸ்டாக் ஆன்லைன் சர்வீசஸ்' என்ற ஒரு முன்னெடுப்பு திட்டத்தை அமல்படுத்தியது.
இத்திட்டம் விவசாயிகளுக்கு நிதி உதவி பெறுவதற்கு தனித்துவமான, விவசாயி அடையாள எண் மூலம் தடையற்ற இணைய சேவைகளை வழங்கி வருகிறது.
இந்திய அரசின், 'பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா' திட்டத்தின் கீழ் வயல், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் ஒருங்கிணைந்த பயிர்க்காப்பீடு பெறும் வசதி உள்ளது.
மேலும் கையேடுகள் மற்றும் படிவங்கள் அனைத்தும் எளிமைப் படுத்தப்பட்டு, பயனாளிகளின் நம்பகத்தன்மையை, நிரூபிக்க பல ஆவணங்களை சமர்பிப்பது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விவசாயிகளின் தரவு தளத்தில் நீக்கப்பட்டுள்ளது.
அனைத்து அதிகாரிகளும், தனித்தனி கடவுச்சொல்லுடன் பாதுகாப்பான சேவை வழங்க முடியும். இணைய சேவைகளை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எங்கிருந்தும் எந்த நேரத்திலும், அணுகக்கூடிய வகையில் மேம்பட்ட செயல் திறன் சேவையுடன் பரிவர்த்தனை நேரத்தை குறைத்துள்ளது. 'அக்ரிஸ்டாக்' இணையதள வசதி சமூக தணிக்கையில், 82 விழுக்காடு தர மதிப்பெண் பெற்றுள்ளது.
இத்துறையின் சிறப்பான செயல்பாடுகளுக்காக கடந்த, 2023ம் ஆண்டு அரசு துறைகளுக்கான பிரிவின் கீழ் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக, முதல்வரின் விருது வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி, வேளாண்துறை இயக்குநர் வசந்தகுமாருக்கு வழங்கினார்.

