ADDED : ஜூன் 15, 2024 05:20 AM

புதுச்சேரி: உலக ரத்ததான தன்னார்வலர்கள் தினத்தையொட்டி ஜிப்மர், புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டி சார்பில், ரத்த தான தன்னார்வலர்கள் விழிப்புணர்வு நடைப்பயணம் நடந்தது.
ராஜிவ் காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் துவங்கிய விழிப்புணர்வு நடைப்பயணத்தை ஜிப்மர் பொறுப்பு இயக்குனர் கவுதம் ராய், மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன், புதுச்சேரி மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் சித்ரா தேவி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, 100 அடி ரோடு, ராஜிவ் சிக்னல், கோரிமேடு வழியாக ஜிப்மர் விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மரக்கன்று நடுதல்
உலக ரத்த தான தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு ஜிப்மர் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, நடந்தது. மாநிலத்தில் 105 முறை ரத்ததானம் வழங்கிய பா.ஜ., மாநில செயலாளர் வெற்றிச் செல்வம், தன்னார்வலர்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மருத்துவர்களும், ஊழியர்களும், ரத்ததான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.