/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி., ஆய்வு
/
பாகூர் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி., ஆய்வு
ADDED : ஆக 31, 2024 02:41 AM

பாகூர்: பாகூர் போலீஸ் நிலையத்தில், டி.ஜி.பி., ஷாலினி சிங் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., ஷாலினி சிங், நேற்று பாகூர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். முன்னதாக, அவருக்கு, சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் தலைமையிலான போலீசார் அணிவகுப்பு மரியாதை வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, அவர், காவல் நிலைய வளாகம், எழுத்தர் பிரிவு, ஆயுத கிடங்கு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு, காவல் நிலையத்தில் பராமறிக்கப்படும் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தார்.
பின்னர், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர் ஆகிய காவல் நிலைய அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் விபரங்களை கேட்டறிந்த அவர், சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்திட வேண்டும்.
காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் கனிவாக நடந்து கொண்டு, அவர்களின் புகார்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையத்தில் பராமறிக்கப்படும் ஆவணங்களை, சி.சி.டி.என்.எஸ்., மூலமாக கணினியில் பதிவேற்றிட வேண்டும் என பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
போலீசார் தரப்பில், காவல் நிலையத்தில் காவலர்கள் பணியிடங்கள் பற்றாக்குறை உள்ளது. அந்த காலி இடங்களை நிரப்பிட வேண்டும்.
மேலும், பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என்றனர். சீனியர் எஸ்.பி.,க்கள் திரிப்பாதி, அனிதா ராய், எஸ்.பி.,க்கள் மோகன்குமார், பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர்கள் சஜித், கலைச்செல்வன் கண்ணன், கணேசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.