ADDED : மே 27, 2024 05:07 AM
புதுச்சேரி: ஏனாமில் கோவில் உண்டியலை உடைத்து திருடிய பணத்தை, அங்கே அமர்ந்து எண்ணிக் கொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே அமைந்துள்ளது. ஏனாம் கனகல்பேட்டாவில் ராமாலயம் கோவில் உள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணிக்கு, கோவிலின் முகப்பு மண்டபத்தின் மீது இருந்து சத்தம் கேட்டது.
அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இது குறித்து ஏனாம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களுடன் கோவிலுக்கு சென்றபோது, உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கோவில் மண்டபத்திற்கு மேல் ஏறி பார்த்தபோது, ஆந்திரா கோத்தபள்ளி, அடிவிபேட்டா பகுதியைச் சேர்ந்த உந்துரு சீனிவாசராவ், 46; என்பவர், சில்லரை பணம் எண்ணிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
உண்டியலில் இருந்த ரூ.10,139 பணத்துடன் நின்றிருந்த உந்துரு சீனிவாசராவ்வை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

