புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் 8 ம் தேதி வருகை:பாதுகாப்பு ஏற்பாடுகளில் அரசு துறைகள் தீவிரம்
புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் 8 ம் தேதி வருகை:பாதுகாப்பு ஏற்பாடுகளில் அரசு துறைகள் தீவிரம்
UPDATED : ஆக 03, 2026 10:02 PM
ADDED : ஆக 03, 2026 09:02 PM

புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி வருகையையொட்டி அரசு ஏற்பாடுகளை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது.
புதுச்சேரி காவல் துறையின் மிக நீண்டகால சிறப்பான சேவை, ராணுவக் கட்டுப்பாடு, ஒழுக்கம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பைப் பாராட்டி, நாட்டிலேயே மிக உயரிய விருதான ஜனாதிபதியின் வண்ண விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விருதினைப் புதுச்சேரி காவல் துறைக்கு வழங்கி கவுரவிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 8-ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தருகிறார். மறுநாள் 9 ம்தேதி காலையில் கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கும் விழாவில் புதுச்சேரி காவல் துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருதினை வழங்கி பாராட்டுகின்றார். இதனைத் தொடர்ந்து, அரசுத் துறைகளும் காவல் துறையும் விழா ஏற்பாடுகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளன.
மீண்டும் புத்துயிர்பெறும் ஏற்பாடுகள்
முன்னதாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழா கடந்த 25-ம் தேதி மாலை புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவல் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் கலந்துகொண்டு விருதை வழங்கிட வேண்டிய இதற்கான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாகச் செய்யப்பட்டிருந்தன.
இருப்பினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அப்போதைய விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த விழா மீண்டும் வரும் 9-ம் தேதி மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
அணிவகுப்புப் பயிற்சி
விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்று ஜனாதிபதியின் உயரிய வண்ண விருதினை வழங்கவுள்ளதை முன்னிட்டு, கோரிமேடு காவல் மைதானம் விழாக்கோலம் பூண்டு வருகிறது.
புதுச்சேரி காவல் துறையினர் தினமும் மைதானத்தில் தீவிர அணிவகுப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விழா நடைபெறும் கோரிமேடு மைதானம் முழுமையாகப் பலத்த போலீஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது.
அரசுத் துறைகள் ஒருங்கிணைப்பு:
குடிநீர், மின்சாரம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளும் விழாவிற்கான உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிப்பதில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. அடிப்படை வசதி ஏற்பாடுகளை கவனிக்க கிரீன் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனிக்க உள்ளாட்சி துறை இயக்குநர் ஆதர்ஷ் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு வளையத்தில்..
புதுச்சேரிக்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அன்றைய தினம் ஒரு நாள் முழுமையாகப் புதுச்சேரியில் தங்குவதற்குத் திட்டமிட்டுள்ளார்.
தற்காக, புதுச்சேரி கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள வரலாற்று சிறப்புமிக்க துாய்மா வீதியில் அமைந்துள்ள நீதிபதி விருந்தினர் மாளிகையில் அவர் தங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரின் வருகையை ஒட்டி, விருந்தினர் மாளிகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரும் பணிகளைப் போலீஸ் தலைமையகம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.
