ADDED : மே 01, 2024 01:31 AM

புதுச்சேரி, : தினமலர் செய்தி எதிரொலியால் வழுதாவூர் சாலை, அய்யங்குட்டிப்பாளையத்தில் பேனர்கள் நேற்று அகற்றப்பட்டது.
புதுச்சேரியில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி பேனர் வைத்து வந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் பேனர் வைக்க விதித்த தடை உத்தரவு நகலுடன், கலெக்டருக்கு கடந்த பிப்., மாதம் தலைமை நீதிபதி சந்திரசேகரன் கடிதம் அனுப்பினார்.
அதில், பேனர்கள் அகற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாக நேரிடம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.
அதன்பின்பு வைக்கப்பட்ட சில பேனர்களும், தேர்தல் நன்னடத்தை காரணமாக கடந்த மாதம் 16ம் தேதி முழுதும் அகற்றப்பட்டது.
ஆனால், அய்யங்குட்டிப்பாளையம் கோபாலன் கடை பஸ் நிறுத்தில் இருந்து பீர் கம்பெனி வரை வரிசையாக 20 திருமண வரவேற்பு பேனர்களும், கண்ணீர் அஞ்சலி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை சாலை மற்றும் கட்டடங்கள் பிரிவு செயற்பொறி யாளர் சுந்தராஜன் உத்தரவின்பேரில், உதவி பொறியாளர் சீனுவாசராவ், இளநிலை பொறியாளர் தமிழரசன் தலைமையிலான ஊழியர்கள் பேனர்களை அகற்றினர்.
நகரில் அகற்றம்
புதுச்சேரி நகரின் பல இடங்களிலும் ஆங்காங்கே புதிதாக பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பேனர்களும் நேற்று அகற்றப்பட்டது.