/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காசநோய் தடுப்பு ஆராய்ச்சிக்காக பி.சி.ஜி.,தடுப்பூசி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மும்முரம்
/
காசநோய் தடுப்பு ஆராய்ச்சிக்காக பி.சி.ஜி.,தடுப்பூசி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மும்முரம்
காசநோய் தடுப்பு ஆராய்ச்சிக்காக பி.சி.ஜி.,தடுப்பூசி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மும்முரம்
காசநோய் தடுப்பு ஆராய்ச்சிக்காக பி.சி.ஜி.,தடுப்பூசி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மும்முரம்
ADDED : மே 25, 2024 03:54 AM

புதுச்சேரி: காசநோய் தடுப்பு ஆராய்ச்சிக்காக புதுச்சேரியில் 60 ஆயிரம் பேருக்கு பி.சி.ஜி.,தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடந்து வருகின்றது.
இந்தியாவை பொறுத்த அளவில் ஒவ்வொரு ஆண்டும் 2.2 லட்சம் மக்கள் காசநோயால் உயிரிழக்கின்ற சூழ்நிலையில்,தேசிய அளவில் காசநோய் தடுப்பூசி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக மத்திய சுகாதார அமைச்சகம்,ஐ.சி.எம்.ஆர்., நிறுவனத்துடன் இணைந்து பி.சி.ஜி., காசநோய் தடுப்பூசி ஆராய்ச்சியை துவங்கியுள்ளன.
இந்த ஆராய்ச்சியில் புதுச்சேரியில் இருந்து 18 வயதிற்கு மேற்பட்ட 60 ஆயிரம் பேர் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.அவர்களுக்கு பி.சி.ஜி., தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 20ம் தேதி துவங்கியது.
இந்த தடுப்பூசி செலுத்தும் முகாம் தற்போது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் முழு வீச்சில் நடந்து வருகின்றது. டாக்டர்கள் கூறும்போது, பிறக்கும்போது ஒரு குழந்தைக்கு பி.சி.ஜி தடுப்பூசி வழங்கப்படும்போது, காசநோய்க்கு எதிராக 5 வயது வரை குறிப்பிடத்தக்க பாதுகாப்பை அந்தத் தடுப்பூசி வழங்குகிறது.
ஆனால் குழந்தைகளுக்கு வயதாகும்போது தடுப்பூசியின் நோய்க்கு எதிராகச் செயல்படும் திறன் குறையத் துவங்கி விடுகின்றது. இதனால் தான் பெரியவர்கள் உள்பட பல தரப்பினருக்கு இந்த பி.சி.ஜி., தடுப்பூசி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது.
உடல் எடை குறைவாக உள்ளவர்,சர்க்கரை நோய், காசநோய் தொடர்பில் உள்ளவர்கள்,65 வயதிற்கு மேற்பட்டவர்கள் உள்பட 5 வகையில் பொதுமக்களுக்கு இந்த காசநோய் தடுப்பூசி போடப்படுகின்றது.மொத்த மூன்று மாதத்தில் இந்த இலக்கினை முடிக்க வேண்டும்.
முதல் மாதத்தில் 80 சதவீத இலக்கினை எட்டி,தடுப்பூசி போட வேண்டும்.விடுப்பட்ட 20 சதவீத பேருக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி காசநோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.

