/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுக் கட்சி பிரமுகர்களை இழுக்க போட்டா போட்டி: விசுவாசிகளுக்கு ரகசிய உத்தரவு
/
மாற்றுக் கட்சி பிரமுகர்களை இழுக்க போட்டா போட்டி: விசுவாசிகளுக்கு ரகசிய உத்தரவு
மாற்றுக் கட்சி பிரமுகர்களை இழுக்க போட்டா போட்டி: விசுவாசிகளுக்கு ரகசிய உத்தரவு
மாற்றுக் கட்சி பிரமுகர்களை இழுக்க போட்டா போட்டி: விசுவாசிகளுக்கு ரகசிய உத்தரவு
ADDED : ஏப் 08, 2024 05:24 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தல் பிரசாரம் முடிய இரண்டு வாரமே உள்ளநிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களுடைய விசுவாசிகளுக்கு ரகசிய அசைன்மெண்ட் கொடுத்து, மாற்று கட்சியில் உள்ள அதிருப்தி பிரமுகர்களை, துாண்டில் போட்டு இழுக்கின்றனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலில் 7 அரசியல் கட்சி வேட்பாளர், 19 அரசியல் கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருக்க, சுயேச்சை வேட்பாளர்களை தேர்தல் களத்தில் சுத்தமாக காணவில்லை.
தங்களுக்கு கிடைத்த போலீஸ் பாதுகாப்பினையே பெரிய கவுரமாக கருதி, பந்தவாக வீட்டை சுற்றியே உலா வருகின்றனர். எங்கும் ஓட்டு கேட்டு செல்லவில்லை. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களிடம் எப்போது பேச்சுவார்த்தை நடத்த, துாது வருவார்கள் என உண்டியலை குலுக்கிக்கொண்டு, பெரிய எதிர்பார்ப்புடன் வாசல்பக்கம் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
துாண்டில் போட்டாச்சு:
பிரசாரம் முடிய இரண்டு வாரமே உள்ள நிலையில், வீதிவீதியாக செல்லும் பிரசாரம் மட்டும் வெற்றியை கொடுத்துவிடாது என்பதால், தொகுதியில் செல்வாக்குள்ள மாற்று கட்சி பிரமுகர்களையும் துாண்டில் போட்டு இழுத்து தங்கள் கட்சியில் இணைத்து வருகின்றனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்குள்ள நபர்கள் யார், அவர்களிடம் உள்ள ஓட்டு வங்கி எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்து, அவர்கள் வீட்டு கதவை தட்டி வருகின்றனர். இதற்காக தங்களுடைய விசுவாசிகளுக்கு ரகசிய அசைன்மென்ட் கொடுத்து, இழுப்பு வேலைகளை துவங்கியுள்ளன.
ஒரு சால்வை... பெரிய கும்பிடு...
யாரெல்லாம் எம்.எல்.ஏ., கனவில் உள்ளனரோ, அவர்களையும் சந்தித்து, நம்ம கட்சி தான் மீண்டும் ஆட்சிக்கு வர போகிறது. எல்லாவற்றையும் பிறகு பேசிக்கொள்ளலாம். முதலில் லோக்சபா தேர்தலில் என்னை ஜெயிக்க வையுங்கள். சட்டசபை சீட்டு உங்களுக்கு தான் என்று, வாக்குறுதிகளையும் அள்ளி வீசி, கொஞ்சம் தேர்தல் செலவிற்கும் பணம் கொடுத்து, தேர்தல் களத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.
யாரிடமாவது 10 ஓட்டுகள் இருப்பதாக தெரிந்தாலும் கூட, எதற்கும் இருக்கட்டும், சிறுதுளியும் பெருவெள்ளமாகும் என்று, பழமொழியை உதிர்த்து, அவர்களுக்கும் ஒரு சால்வையும், ஒரு பெரிய கும்பிடும் போட்டு, ஐக்கியப்படுத்திக்கொண்டு தேர்தல் பணிகளில் இழுத்து போட்டு வருகின்றனர்.
நேரடியாக களம்:
மாற்று கட்சிகளில் முக்கிய பொறுப்புகளின் உள்ளவர்களிடம் பேசி, தங்கள் கட்சிக்கு வந்து ஆதரவு அளிக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். விசுவாசிகளிடம் வளையாத - பணியாத மாற்று கட்சி பிரமுகர்களை ஒரு கட்டத்தில் வேட்பாளர்களே நேரடியாக களத்தில் இறங்கி, தங்கள் கட்சிக்கு வரும்படி அழைப்பு விடுகின்றனர்.
சத்தம் இல்லாமல் சமாதானம்:
இப்படி லோக்சபா தேர்தலில் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சி வேட்பாளர்கள் முழு வீச்சில் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கியுள்ளது அரசியல் கட்சியினரிடமும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக லோக்சபா தேர்தல் பார்க்கப்படுகின்றது.
இப்போது கட்சி நிர்வாகிகளை விட்டுவிட்டால், அது சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்து வெற்றியை பாதிக்கும் என்பதால் தங்களுடைய கட்சியினரை பிற கட்சிகளுக்கு செல்லாத வகையில் தக்க வைத்துக்கொள்ள சமாதானப்படுத்தி வருகின்றனர்.
அவங்க கூப்பிட்டாங்க என்பதற்காக அங்கெல்லாம் போகாதப்பா... உன்னுடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும். தேர்தல் முடிந்ததும், எல்லாவற்றையும் பேசி கொள்ளலாம்.
எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து தருகிறோம் என, தடுத்து நிறுத்தி கட்சி கரையாமல் காப்பாற்றும் பணியும், சத்தம் இல்லாமல் நடந்து வருவதால் இந்த முறை, புதுச்சேரி தேர்தல் களம் முன் எப்போதும் இல்லாத வகையில் அனல் பறக்கிறது.

