ADDED : ஜூலை 19, 2026 05:22 PM
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு துாண்டியதாக காதலனை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு, பெரியபேட்டை சேர்ந்தவர் பால்ராஜ் மகள் ஸ்ரீலேகா, 24; கடந்த 17ம் தேதி வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப் பதிந்து, விசாரித்தனர்.
ஸ்ரீலேகா சின்னபேட்டை சேர்ந்த முகிலன், 24; என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அவர் திருமணம் செய்ய மறுத்ததால் தான் ஸ்ரீலேகா தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று முன்தினம் மண்ணாடிப்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் முகிலனை பிடித்து விசாரித்தனர். அவர், ஸ்ரீலேகாவை காதலித்து ஏமாற்றியதுடன், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் முகிலனை மொபைலில் தொடர்பு கொண்ட ஸ்ரீலேகாவை தகாத வார்த்தைகளால் திட்டி தற்கொலைக்கு துாண்டியது தெரியவந்தது.
தொடர்ந்து, சந்தேக மரணம் பிரிவில் பதியப்பட்ட வழக்கை, போலீசார் தற்கொலைக்கு துண்டிய பிரிவில் மாற்றி முகிலனை நேற்று கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
