பைக் மீது கார் மோதி விபத்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
பைக் மீது கார் மோதி விபத்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ADDED : ஜூன் 21, 2026 08:31 PM
புதுச்சேரி: கொக்கு பார்க் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு வாகனமும் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, ராஜிவ் சதுக்கத்தில் இருந்து வெள்ளை நிற பார்சுனர் கார், (பி.ஓய் 01 பி.ஓய் 8820) இ.சி.ஆர் வழியாக லாஸ்பேட்டை நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு அதிவேகமாக சென்றது. காரை காமராஜ் நகரை சேர்ந்த சுரேந்தர், 25; என்பவர் ஓட்டினார். கொக்கு பார்க் சந்திப்பு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இரவு டிபன் கடை எதிரே நின்றிருந்த பைக் மீது மோதியது.
அதில், பைக்கின் பெட்ரோல் டேங்க் சேதமடைந்து, அதில் இருந்த பெட்ரோல் கசிந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து, பைக் மீது மோதிய காரிலும் தீ பரவி காரின் முன்பகுதியும் தீப்பிடித்து எரிய துவங்கியது.
இதையடுத்து, காரில் சிக்கிய சுரேந்தர் மற்றும் அவரது நண்பரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தீயணைப்பு மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோரிமேடு தீயணைப்பு துறையினர் பைக் மற்றும் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அதற்குள் பைக் முற்றிலுமாக எரிந்த நிலையில், காரின் முன்பகுதி முழுதும் எரிந்து சேதமடைந்தன.
விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, விபத்தில் பைக் மற்றும் கார் தீ பிடித்து எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
