ADDED : ஆக 04, 2026 10:54 PM
வில்லியனுார்: துத்திப்பட்டு சி.ஏ.பி., கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட வீரரை தாக்கிய பயிற்சியாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
முத்திரையர்பாளையம் தனபால் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 32. இவர் துத்திப்பட்டு சி.ஏ.பி., கிரிக்கெட் மைதானத்தில் சீனியர் அணியில் கடந்த 5 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். மேலும் பி.பி.எல்., போட்டியில் ஊசுடு அக்காடு வாரியர் அணியில் விளையாடி வருகிறார்.
நேற்று வழக்கம்போல் கிரிக்கெட் மைதானத்தில் கார்த்திகேயன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அங்கு வந்த சி.ஏ.பி,. பயிற்சியாளர் வெங்கட்ராமன், கார்த்திகேயனிடம் தகராறில் ஈடுபட்டு, கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்துள்ளார். இனி எந்த அணியிலும் கார்த்திகேயனை விளையாட விடாமல் பார்த்துக்கொள்கிறேன் என, திட்டி மிரட்டி உள்ளார்.
காமயடைந்த கார்த்திகேயன் வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று சேதராப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பயிற்சியாளர் வெங்கட்ராமன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
