தகவல் மற்றும் விளம்பரத்துறையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
தகவல் மற்றும் விளம்பரத்துறையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : ஜூன் 25, 2026 08:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு தகவல் மற்றும் விளம்பரத்துறையில் பயிற்சி பெற்ற பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியின் காட்சி தொடர்பியல் துறையை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் அரசு தகவல் மற்றும் விளம்பரத் துறையுடன் கடந்த 2025ம் ஆண்டு ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியின் காட்சித் தொடர்பியல் துறையைச் சேர்ந்த 3ம் ஆண்டு மாணவர்கள் 5 பேர், தகவல் மற்றும் விளம்பரத் துறையில் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டு, துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களுக்கான உள்ளடக்கங்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டனர்.
மேலும், ஏழு மாத பயிற்சியில் மாணவர்கள் சமூக வலைதளங்களுக்கான காட்சிப் பதிவுகள், தகவல் சார்ந்த படைப்பூக்க உள்ளடக்கங்கள் மற்றும் டிஜிட்டல் தகவல் பரிமாற்றப் பொருட்களை உருவாக்கி, சமூக ஊடக மேலாண்மை மற்றும் அரசின் தகவல் தொடர்பு செயல்பாடுகளில் நேரடி அனுபவத்தைப் பெற்றனர்.
தொடர்ந்து, ஏழு மாத கால பயிற்சியை நிறைவு செய்த காட்சித் தொடர்பியல் துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசின் தகவல் மற்றும் விளம்பரத் துறைச் செயலர் முகமது அஹ்சன் அபித் நிறைவுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இதில், தகவல் மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் சுரேஷ் ராஜ், பல்கலைக்கழக சமுதாய கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன், காட்சித் தொடர்பியல் துறை இணைப் பேராசிரியர் கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
