ADDED : ஜூன் 18, 2026 06:44 PM

புதுச்சேரி: முதலியார்பேட்டை, உழந்தை கீரைப்பாளையம், சிந்து பிளாசாவில் ஆதார் சேவை மையம் திறப்பு விழா நடந்தது.
முதல்வர் ரங்கசாமி ஆதார் சேவை மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலர் சவுத்ரி முகமது யாசின், கலெக்டர் குலோத்துங்கன், உதய் பெங்களூரு மண்டல துணை பொது இயக்குநர் அன்னி ஜாய்ஸ், இயக்குநர் பவன் குமார் பஹ்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், ஆதார் சேவைகள் குறித்த திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையால் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு காணொலிகளை ஆங்கிலம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
மேலும், திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை ஆகியவற்றிற்கு ஆதார் பதிவு உபகரணங்கள் மற்றும் புகைப்படம், கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிப்பதற்கான கருவிகள் வழங்கப்பட்டன.
இந்த ஆதார் சேவை மையம் அரசு அறிவித்த பொது விடுமுறை நாட்களை தவிர, ஆண்டு முழுதும் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை செயல்படும். பொதுமக்கள் ஆதார் செயலி மூலம் முன்பதிவு செய்தோ அல்லது நேரடியாக மையத்திற்குச் சென்று சேவைகளைப் பெறலாம்.
இந்த ஆதார் மையம் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையிலிருந்தே எழ முடியாதவர்கள் மற்றும் முதியோர்களுக்கு அவர்களது இருப்பிடத்திற்கே சென்று ஆதார் சேவைகளை வழங்குகிறது. வரும் செப்டம்பர் மாதம் வரை இச்சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
