சவுக்கு பயிருக்கு நஷ்டஈடு கேட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு
சவுக்கு பயிருக்கு நஷ்டஈடு கேட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு
ADDED : ஜூன் 18, 2026 06:44 PM
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில், மின் கசிவு உள்ளிட்ட பல்வேறு இயற்கை காரணங்களால் 5000 ஏக்கருக்கும் மேற்பட்ட சவுக்கு பயிர்கள் சேதமான நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு எந்த துறை வழங்குவது என்ற குழப்பத்திற்கு தீர்வு காண கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், வானுார், மரக்காணம், விழுப்புரம் தாலுகா பகுதிகளில் நெல், கரும்புக்கு மாற்றாக 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் சவுக்கு சாகுபடி செய்யப்படுகிறது. வயல்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் உரசி சவுக்கு மரங்கள் அடிக்கடி தீப்பற்றி எரிந்து சேதமாகி வருகிறது.
மாவட்டத்தில் 5000 ஏக்கருக்கும் மேல் சவுக்கு பயிர்கள் இதுவரையில், சேதமாகியுள்ளது. இதுபோல் மின் கசிவு, மின் கம்பி உரசியால் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் சவுக்கு விவசாயிகளுக்கு அரசு சார்பில் இதுவரை இழப்பீடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், கலெக்டர், சப் கலெக்டர், வேளாண் துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை என பல்வேறு துறைகளுக்கு சவுக்கு எரிந்து சேதமான விவசாயிகளுக்கு நஷ்டு ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது, விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில சவுக்கு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சந்திரபிரபு கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட சவுக்கு விவசாயிகள் சார்பில் இழப்பீடு வழங்குமாறு வனத்துறை, மாவட்ட கலெக்டர் என பல அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை.
அடுத்த கட்டமாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போகிறோம்’ என்றார்.
