/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய தொழிற்சாலை துவங்க முதல்வர் ரங்கசாமி அழைப்பு
/
புதிய தொழிற்சாலை துவங்க முதல்வர் ரங்கசாமி அழைப்பு
ADDED : ஆக 11, 2024 05:14 AM

புதுச்சேரி, : இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி கிளை சார்பில், மண்டல கவுன்சில் கூட்டம் சன்வே ஓட்டலில் நடந்தது.
கூட்டத்தில் சி.ஐ.ஐ., தென்மண்டல தலைவர் நந்தினி, துணை தலைவர் தாமஸ் ஜான் முத்துட், மண்டல இயக்குனர் ஜெயேஷ், இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி தலைவர் சண்முகானந்தம், துணை தலைவர் சமிர் கம்ரா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
புதுச்சேரி அமைதியான மாநிலம். இங்கு தொழில் துவங்கி உற்பத்தி செய்ய முதலீட்டாளர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. கரசூர், சேதராப்பட்டில் 750 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு மாஸ்டர் பிளாண் தயாரிக்க ஒரு நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம். எந்தெந்த பகுதியில் எந்த தொழிற்சாலை வரலாம். ஐடி பார்க் எங்கு வரலாம், மருந்து உற்பத்தி பூங்கா எங்கு வரலாம் என்று மாஸ்டர் பிளாண் தயாரித்து கொடுத்தவுடன் உடனடியாக முதலீட்டாளர்களுக்கு தொழில் துவங்குவதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்ய உள்ளது.
ஏ.எப்.டி., பாரதி மற்றும் சுதேசி பஞ்சாலை வளாகத்தில் ரூ.105 கோடி முதலீட்டில் பிரதமரின் ஏக்தா மால் துவங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு போதிய இடமில்லை. விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு தமிழக அரசு இடம் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
முதலீட்டாளர்கள் தொழில் துவங்க புதுச்சேரிக்கு வர வேண்டும். எளிதாக தொழில் துவங்குவதற்கான என்னென்ன வாய்ப்புகளை உள்ளதோ அதை நடைமுறை படுத்த அரசு கவனம் செலுத்தும்' என்றார்.

