/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு மைதானங்களில் முதல் முறையாக சிறுவர் நுாலகம்
/
விளையாட்டு மைதானங்களில் முதல் முறையாக சிறுவர் நுாலகம்
விளையாட்டு மைதானங்களில் முதல் முறையாக சிறுவர் நுாலகம்
விளையாட்டு மைதானங்களில் முதல் முறையாக சிறுவர் நுாலகம்
ADDED : மே 05, 2024 04:39 AM

புதுச்சேரியில் முதல்முறையாக விளையாட்டு மைதானங்களில் விளையாட்டு பொருட்களுடன் 'சிறுவர் மகிழ்ச்சி நுாலகம்' கலை, பண்பாட்டு துறை அமைக்கிறது.
புதுச்சேரி கலை, பண்பாட்டு துறையின் கீழ், 197 ஆண்டு பழமைவாய்ந்த ரோமன் ரோலண்ட் நுாலகம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு உட்பட நான்கு லட்சம் நுால்களுடன் இயங்கி வருகிறது.
நுாலகத்தில் பெரியவர்கள் பிரிவில் 54,924 உறுப்பினர்கள், சிறுவர்கள் பிரிவில் 9,696 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் புதுச்சேரியில் தலைமை நுாலகம் உட்பட 55 கிளை நுாலகம், காரைக்காலில் 19, மாகியில் 4, ஏனாமில் 3 உட்பட மொத்தம் 81 கிளை நுாலகம் பயன் பாட்டில் உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக புதுச்சேரி எழுத்தாளர்களின் நுால்கள், அரசு நுாலகங்களுக்கு வாங்கப்படாமல் இருந்து வந்தது. முன்னாள் கவர்னர் தமிழிசை மாணவர்களிடையே நுால்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரியில் 23 தொகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் விளையாட்டு உபகரணங்களுடன், சிறு நுாலகங்களை அமைப்பதற்கும், கிளை நுாலக சிறுவர் பிரிவில் விளையாட்டு உபகரணங்களுடன் இயங்கவும் கலை, பண்பாட்டு துறைக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் 2023 - - 24ம் ஆண்டிற்கான அரசு நுாலகங்களுக்கு, புதுச்சேரியை சேர்ந்த 211 எழுத்தாளர்களின் 21,100 நுால்கள் 40 லட்சம் ரூபாய்க்கும், பொது பிரிவில் பல்வேறு எழுத்தாளர்களின் நுால்கள் 40 லட்சத்திற்கும் வாங்கப்பட்டுள்ளது.
சிறுவர் பிரிவிற்கு 20 லட்சம் ரூபாயில் நுால்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என, மொத்தம் ஒரு கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கப் பட்டுள்ளன.
இதில், புதுச்சேரி வெங்கட்டா நகர் சிறுவர் பூங்கா, லாஸ்பேட்டை அசோக் நகர் பூங்கா, ஏர்போர்ட் சாலை பொன்னியம்மன் கோவில் பூங்கா ஆகிய மூன்று இடங்களில் முதற்கட்டமாக விளையாட்டு உபகரணங்களுடன் 'சிறுவர் மகிழ்ச்சி நுாலகம்' அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.
இது தவிர கிளை நுாலகத்தில் உள்ள சிறுவர் பிரிவிலேயே விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி கிளை நுாலகங்களுக்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அனுப்பும் பணி ரோமன் ரோலண்ட் நுாலகத்தில் வேகமாக நடந்து வருகிறது.