/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 5,000க்கும் மேல் வரி பாக்கி ஆணையர் எச்சரிக்கை
/
ரூ. 5,000க்கும் மேல் வரி பாக்கி ஆணையர் எச்சரிக்கை
ADDED : பிப் 15, 2025 05:46 AM

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் 5 ஆயிரத்திற்கு மேல் வரி பாக்கி வைத்திருந்ததால், அலுவலக விளம்பர பலகையில் பெயர் வெளியிடப்படும் என ஆணையர் எழில்ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 42 கிராமங்களில், கடந்த 3ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரை வீடு, சொத்து, குடிநீர், தொழில் உரிம கட்டணம் மற்றும் வரி பாக்கி செலுத்துவதற்கான வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
காட்டேரிக்குப்பம் கொம்யூன் அலுவலகத்தில் நடந்து வரும் சிறப்பு முகாமை ஆணையர் எழில்ராஜன் நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து, தங்களது குடிநீர், வீடு, சொத்து உள்ளிட்ட வரி பாக்கிகளை செலுத்தியவர்களுக்கு ரசீது வழங்கினார்.
முகாமில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆணையர் எழில்ராஜன் கூறுகையில், 'வீடு, குடிநீர், வர்த்தக நிறுவனங்களுக்கு வரி வசூல் நடந்து வருகிறது. இதில், தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் கட்டடங்கள் மறு அளவீடு செய்து, புதிய வரி விதிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொம்யூன் பஞ்சாயத்தில் ரூ. 5,000த்திற்கு மேல் வரி பாக்கி வைத்தவர்களின் பெயர்கள் மற்றும் தொகை அலுவலக விளம்பர பலகையில் வெளியிடப்படும்.
அதையும் மீறி வரி செலுத்தப்படவில்லை எனில், தனி அதிகாரி ஒப்புதல் பெற்று செய்தித்தாள்களில் வெளியிடப்படும்.
ஆகையால், பொதுமக்கள் இந்த வரி வசூல் முகாமை பயன்படுத்தி தங்களது வரிபாக்கியை முழுமையாக செலுத்தி, மேல் நடவடிக்கையை தவிர்த்து கொள்ளவும்' என்றார்.

