தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நலிந்த அரசு நிறுவனங்களை மீட்டெடுக்க முடிவு! தனியார் பங்களிப்புடன் களம் இறங்குகிறது

நலிந்த அரசு நிறுவனங்களை மீட்டெடுக்க முடிவு! தனியார் பங்களிப்புடன் களம் இறங்குகிறது

நலிந்த அரசு நிறுவனங்களை மீட்டெடுக்க முடிவு! தனியார் பங்களிப்புடன் களம் இறங்குகிறது


UPDATED : ஜூலை 07, 2026 07:20 PM

ADDED : ஜூலை 07, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2026 07:20 PM ADDED : ஜூலை 07, 2026 07:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நலிந்துபோய் உள்ள அரசு நிறுவனங்கள் தனியார் பங்களிப்புடன் மீட்டெடுக்கப்பட உள்ளது.

புதுச்சேரி தொழில் சூழலை உலகத்தரத்திற்கு உயர்த்தவும், நீண்டகாலமாக நலிவடைந்துள்ள அரசு நிறுவனங்களை மீட்டெடுத்துப் பொருளாதாரப் பாதையில் கொண்டு வரவும், பொது-தனியார் பங்களிப்பு கொள்கை-2026ஐ புதுச்சேரி அரசு புதிதாக உருவாக்கி, அமலுக்கு கொண்டு வந்துள்ளது. தொழில் மற்றும் வணிகத்துறை வாயிலாக இந்த அதிரடி திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நவீனப்படுத்துதல்:: புதுச்சேரியின் தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான சாலை வசதிகள், தடையில்லா மின்சாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் பொது வசதி மையங்களை மேம்படுத்துவதில் அரசுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசு நிதி ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்காமல், தனியார் துறையின் நிபுணத்துவம், தொழில்நுட்பத் திறன் மற்றும் மூலதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உள்கட்டமைப்பு பணிகளைத் துரிதப்படுத்துவதே இக்கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

நிர்வாக கட்டமைப்பு:: இத்திட்டத்தைச் செயல்படுத்தப் புதுச்சேரி தொழில் மேம்பாடு, முதலீடு மற்றும் ஊக்குவிப்புக் கழகம் (பிப்டிக்) நோடல் ஏஜென்சியாக நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கெனத் தலைமைச் செயலாளர் தலைமையில் பிரத்யேக பி.பி.பி., வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்டிக் நிறுவனத்திற்குள் ஒரு தனி பி.பி.பி., பிரிவு அமைக்கப்பட உள்ளது. இப்பிரிவு திட்டங்களை அடையாளம் காண்பது, சாத்தியக்கூறு அறிக்கைகளைத் தயாரிப்பது மற்றும் வெளிப்படையான ஏல நடைமுறைகளை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

நலிந்த நிறுவனங்களுக்கு மறுவாழ்வு:: புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகளை ஈர்ப்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பல அரசு நிறுவனங்கள் நிதி நெருக்கடியால் நலிவடைந்து, மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவற்றுக்குப் புத்துயிர் அளிக்க இக்கொள்கை வழிவகை செய்கிறது.

பயன்பாடின்றி இருக்கும் அரசு சொத்துகளைக் கண்டறிந்து, சலுகை அடிப்படையிலான மறுமேம்பாடு மூலம் மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. முடங்கிக் கிடக்கும் நிறுவனங்களைச் சொத்து பணமாக்கல் முறை மூலம் நவீனப்படுத்தி, அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நலிந்த நிறுவனங்களின் கடன் சிக்கல்களைத் தீர்க்க, கடன் மறுசீரமைப்பு மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை பிப்டிக் நிறுவனத்தின் பிரத்யேகப் பிரிவு வழங்கும். திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களுக்குத் தீர்வு காணுதல் அல்லது தேவைப்படும் பட்சத்தில் நிறுவனங்களைச் சட்டப்பூர்வமாக மூடுதல் போன்ற நடவடிக்கைகளும் இக்கொள்கையின் கீழ் மேற்கொள்ளப்படும்.

இந்தத் திட்டமானது, முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கையான சூழலை உருவாக்கித் தருவதோடு, புதுச்சேரியைச் சிறந்த தொழில்முனைவோர் மையமாக மாற்ற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சிக்கு புதிய மைல்கல் அரசு-தனியார் பங்களிப்புடன் கூடிய புதிய உட்கட்டமைப்பு திட்டம் சம்பந்தமாக தொழில் துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசு மற்றும் தனியார் துறையின் இந்த ஒருங்கிணைந்த முயற்சி, புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். முடங்கிக் கிடக்கும் பொதுச் சொத்துகளைப் பொருளாதார ரீதியாக உயிர்ப்பிப்பதன் மூலம், புதுச்சேரியின் தொழில் துறையில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க முடியும்' என்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us