வைத்திலிங்கம் பதவி விலக வலியுறுத்தி காங்., நிர்வாகிகள் திடீர் போராட்டம்
வைத்திலிங்கம் பதவி விலக வலியுறுத்தி காங்., நிர்வாகிகள் திடீர் போராட்டம்
ADDED : மே 06, 2026 07:21 PM
புதுச்சேரி: தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நிர்வாகிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து 16 இடங்களில் காங்., போட்டியிட்டு, ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட மாநில தலைவர் வைத்திலிங்கம் டெபாசிட் இழந்தார்.
இந்நிலையில் காங்., தோல்விக்கு காரணமான வைத்திலிங்கம், தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி அக்கட்சியின் ஓ.பி.சி., அணி நிர்வாகிகள் தலைமை அலுவலகம் எதிரே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்., தலைவர் பதவி விலக வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
நிர்வாகிகள் கூறுகையில், ‘சட்டசபை தேர்தலையொட்டி, ஓராண்டாக வைத்திலிங்கம், மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் உள்ளிட்ட தலைவர்களிடம் 30 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் த.வெ.க.,வுடன் கூட்டணி வைத்து, 20 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறினோம். அதற்கும் வைத்திலிங்கம் ஒத்துவரவில்லை.
இதனால் வைத்திலிங்கத்தின் மீது இருந்த நம்பிக்கை எங்களுக்கு போய்விட்டது. கட்சித் தலைவர் தான் இந்த தோல்விக்கு முக்கிய காரணம். வைத்திலிங்கம் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டிருந்தால், ஜோஸ் சார்லஸ் மார்டினை தோற்கடித்திருக்க முடியும். ஆனால் அதனை செய்யாமல் தட்டாஞ்சாவடியில் முதல்வரை எதிர்த்து போட்டியிட்டது ஏன் என தெரியவில்லை.
த.வெ.க.,வுடன் கூட்டணியும் வைக்கவில்லை. தி.மு.க.,வுடனான கூட்டணியிலும் குளறுபடி ஏற்பட்டது. காங்., கட்சியின் மதிப்பையும், பெயரையும் கெடுத்து, ஓடாத வண்டி என சொன்னவர் தி.மு.க., அமைப்பாளர் சிவா. இன்றைக்கு காங்., அனைத்து தரப்பு நிர்வாகிகளும் மனக்குமுறலில் இருக்கின்றனர்.
எனவே, வைத்திலிங்கம் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சீனியர் துணைத் தலைவர் தேவதாஸை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ராகுல் நேரடியாக தலையிட்டு புதிய நிர்வாகிகள் குழுவை நியமிக்க வேண்டும்.
வரும் 17ம் தேதி டில்லி சென்று ராகுலை சந்தித்து காங்., படுதோல்விக்கு காரணமான வைத்திலிங்கத்தின் மீது புகார் கொடுக்க இருக்கிறோம்’ என்றனர்.
