/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'மதமாற்றத்தை ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது'
/
'மதமாற்றத்தை ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது'
ADDED : மே 11, 2024 04:55 AM
புதுச்சேரி: ''நான் மதங்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் ஒருபோதும் மதமாற்றத்தை ஒத்துக்கொள்ள மாட்டேன்'' என கவர்னர் ராதாகிருஷ்ணன் பேசினார்.
புதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் நடந்த கம்பன் விழாவில் நேற்று அவர் பேசியதாவது:
கடந்த, 57 ஆண்டுகளில் இல்லாத சிறப்பு இந்தாண்டு கம்பன் விழாவிற்கு இருக்கிறது. காரணம், கம்பன் புகழ்ந்த ராமன் சிறைக்குள் இருந்தான். இப்போது தான், தான் பிறந்த வீட்டில், மகத்தான கோவிலை தனக்காக கட்டிக்கொண்டு இருக்கிறான். கம்பன் தான், ராமனை கடவுளாக உயர்த்தி காட்டினான்.
வடக்கே அயோத்தியில் பிறந்த ராமன், வனவாச காலத்தில் பல்வேறு இடங்களை கடந்து தமிழகத்திற்கு வந்து சேர்கிறான். தமிழகத்தில் இருந்து தான், இலங்கை மீது போர் புரிந்து, மனைவியை மீட்டு மீண்டும் அயோத்தி சென்று அரசனாக முடி சூட்டி கொள்கிறான்.
தாய் மதம், ஒருபோதும் மாற்றிக்கொள்ளத்தக்கதல்ல. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இதை நான் விட்டுத்தர மாட்டேன். எனக்கு ஒரு போதும் மதவெறி கிடையாது. நான் மதங்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் ஒருபோதும் மதமாற்றத்தை ஒத்துக்கொள்ள மாட்டேன்.
நம்முடைய தேசத்தில் மட்டும் தான், யூதர்கள் எந்த தொல்லைக்கும், ஆளாகவில்லை. 'யாதும் ஊரே.. யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனின் வரிகள் தான், இந்த தேசத்தின் உயர்ந்த பண்பாட்டை, உலகிற்கு அறிவித்தது. இந்த கம்பன் விழாவை, உலகின் பல பகுதிகளில் நடத்தி, தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாட்டின் பெருமையை, தமிழ் கலாச்சாரத்தின் உயர்வை, தமிழனின் விருந்தோம்பல் பண்பை, உலகெங்கும் எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.