ADDED : மார் 22, 2024 05:52 AM

திருக்கனுார் : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமையில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஏப்., 19ம் தேதி நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் தலைமையில் ஊழியர்கள் நேற்று பஞ்சாயத்திற்கு உட்பட பகுதிகளில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை வெள்ளை வர்ணம் அடித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கட்சி பேனர்கள், விளம்பர பலகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை ஊழியர்கள் அகற்றினர். இதேபோல், பல்வேறு சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் விளம்பர பேனர்களை பொதுப்பணித் துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், ஊழியர்கள் அகற்றினர்.

