ADDED : மே 04, 2024 07:14 AM

திருக்கனுார்: காட்டேரிக்குப்பத்தில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை ஆணையர் எழில்ராஜன் தலைமையில் ஊழியர்கள் துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு, குடிநீர் வினியோகம் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், குடிநீர் வினியோகம் பாதிக்கப்படாத வகையில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்புகளை எடுத்து, அதனை தோட்டங்கள் மற்றும் தேவையில்லாத காலி மனைகளில் பயன்படுத்தி வரும் இணைப்புகள் ஊழியர்கள் மூலம் கண்டறிந்து, துண்டிக்கும் பணி நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நேற்று காட்டேரிக்குப்பம் பகுதிகளில் அனுமதியின்றி முறைகேடாக எடுக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து, ஆணையர் எழில்ராஜன் தலைமையில் ஊழியர்கள் துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், ஓவர்சீஸ் சச்சிதானந்தம் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உடனிருந்தனர்.