/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணம், பரிசு பொருள் வினியோகத்தை தடுப்பதற்கு சிறப்பு கண்காணிப்பு மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
/
பணம், பரிசு பொருள் வினியோகத்தை தடுப்பதற்கு சிறப்பு கண்காணிப்பு மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
பணம், பரிசு பொருள் வினியோகத்தை தடுப்பதற்கு சிறப்பு கண்காணிப்பு மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
பணம், பரிசு பொருள் வினியோகத்தை தடுப்பதற்கு சிறப்பு கண்காணிப்பு மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
ADDED : ஏப் 17, 2024 07:54 AM
புதுச்சேரி : பணம், டோக்கன், பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்க சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட உள்ளோம் என, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்தார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதி ஓட்டு பதிவு ஏற்பாடுகள் குறித்து, அவர், கூறியதாவது: புதுச்சேரியில் ரூ. 3.78 கோடி ரொக்கம், ரூ. 3.54 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 16,835 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டது. 131 பேர் கைது செய்யப்பட்டனர். 531 கலால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ. 24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு நாளில் வயதானோர், உடல் நலம் குன்றியோர் என 345 பேர் ஓட்டுச்சாவடி வந்து செல்ல வாகனம் கோரியிருந்தனர். தன்னார்வலருடன் போக்குவரத்து வசதி செய்யப்படும்.
வீடு வீடாக பூத் சிலிப் கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டளிக்க பூத் சிலிப் மட்டும் போதாது. வாக்காளர் அடையாள அட்டை அவசியம். இல்லாவிட்டால் 12 மாற்று ஆவணங்கள் காட்டலாம்.
சினிமா தியேட்டர்களில் 18ம் இரவு காட்சி, 19ம் தேதி அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றது.
தேர்தலையொட்டி மின்தடை நேரங்களில் பரிசு பொருள், டோக்கன், பணம் வழங்கலாம் என, கருத்து நிலவுகிறது. இரவில் மின் தடை ஏற்படக்கூடாது என, மின்துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். ஏழு அரசு ஊழியர்கள் மீது கட்சி சார்ந்த பணியாற்றியது தொடர்பாக வந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடக்கிறது.
பணம், டோக்கன், பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட உள்ளோம். அதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நன்னடத்தை விதிமீறி விளம்பரம் செய்த ஐந்து வேட்பாளர்களுக்கு ரூ. 2 லட்சம் அபராதத்தை தேர்தல் துறை விதித்துள்ளது.
இவ்வாறு அவர், கூறினார்.

