நிரந்தர சபாநாயகரை நிமிக்க வலியுறுத்தி தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா போராட்டம்
நிரந்தர சபாநாயகரை நிமிக்க வலியுறுத்தி தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா போராட்டம்
ADDED : ஜூலை 02, 2026 09:43 PM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு நிரந்தர சபாநாயகரை நியமிக்க வலியுறுத்தி, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி சட்டசபைக்கு நிரந்தர சபாநாயகரை நியமிக்க வேண்டும். அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்க வேண்டும். சட்டசபையை உனடியாக கூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., சார்பில் ஏற்கனவே, அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, புதுச்சேரி சட்டசபையில் நேற்று காலை 11:30 மணியளவில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், விக்னேஷ்கண்ணன், கார்த்திகேயன், செந்தில் ஆகியோர் ஒன்று திரண்டனர்.
தொடர்ந்து அவர்கள் கோஷமிட்டபடி, சட்டசபையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 12:45 மணியளவில் அவர்களை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தனது அறைக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் சபாநாயகர் தேர்தலுக்கான கோப்பு கவர்னரிடம் உள்ளது. கவர்னர் வெளியூர் சென்றிருப்பதால், திரும்பி வந்ததும் அவரது கவனத்திற்கும், முதல்வர் கவனத்திற்கும் கொண்டு செல்வதாகவும், பத்து நாட்களுக்குள் எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என அன்பழகன் உறுதியளித்தார். இதனையேற்ற எம்.எல்.ஏ.,க்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால், சட்டசபை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
நாஜிம் எம்.எல்.ஏ., கூறியதாவது:
ஐந்து மாநிலங்களுக்கு ஒன்றாக தேர்தல் நடந்தது. மற்ற மாநிலங்களில் சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால் சிறிய மாநிலமான புதுச்சேரிக்கு இது வரை சபாநாயகர் தேர்வு செய்யப்படவில்லை. அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.
எனவே உடனே சபாநாயகர் தேர்தலை நடத்தி சட்டசபையை கூட்ட வேண்டும். அதற்கு முன், முதல்வரும், கவர்னரும் இணைந்து சபாநாயகர் தேர்தலை அறிவிக்க வேண்டும். சபாநாயகர் தேர்தல் தொடர்பான கோப்பு தொடர்பாக முதல்வர் அலுவலகமும், கவர்னர் அலுவலகமும் தெளிவு படுத்த வேண்டும்.
அதேபோல் அமைச்சர்களின் இலாகாக்களை ஓரிரு நாட்களில் அறிவிக்க வேண்டும். அப்போதுதான், சட்டசபையில் பட்ஜட் தாக்கலின்போது, அவர்களின் துறைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க வசதியாக இருக்கும். எதிர்க்கட்சியாக நாங்கள் என்ன செயல்படுத்த முடியுமோ அதை செய்வோம். சட்டசபையில் ஒரு அதிகாரம், ராஜ்நிவாசில் ஒரு அதிகாரம், தலைமை செயலகத்தில் ஒரு அதிகாரம் நடக்கிறது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்., பதவி கேட்பது சரியானது. குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ., அதிக பதவிகளை கேட்பது ஏற்புடையதல்ல’ என்றார்.
