மாநில அந்தஸ்திற்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கை: தி.மு.க., மாநில அமைப்பாளர் வலியுறுத்தல்
மாநில அந்தஸ்திற்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கை: தி.மு.க., மாநில அமைப்பாளர் வலியுறுத்தல்
UPDATED : மே 14, 2026 03:59 PM
ADDED : மே 14, 2026 03:40 PM
புதுச்சேரி: கல்வித்துறையின் சீர்கேடுகளை களைந்து மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்திட வேண்டும் என, தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி மாநில முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ரங்கசாமிக்கும், அமைச்சர்களுக்கு தி.மு.க., சார்பில், வாழ்த்துக்கள். மாநில வளர்ச்சிக்காக சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் ஆற்றல் மிகு எதிர்க்கட்சியாக தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள் குரல் கொடுப்பார்கள். அரசு பொறுப்பேற்றவுடன் அனைவருக்குமான மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் அறிவித்த திட்டங்கள் உடனடியாக செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து துறைகளிலும் தாங்கள் நேரிடையாக கவனம் செலுத்திட வேண்டும்.
நீண்ட நாள் கனவாக உள்ள மாநில அந்தஸ்து பெறுவதற்கு இப்போதாவது ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் கல்வித்துறை மிகவும் பின்தங்கி உள்ளது. குறிப்பாக சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் அரசுப் பள்ளிகள் 82.59 சதவீத தேர்ச்சியுடன் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது கவலைக்குரிய விஷயம். எனவே, கல்வித்துறையின் சீர்கேடுகளை களைந்து, மாணவர்களுக்கு தரமான கல்வியை முதல்வர் ரங்கசாமி உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
