டிபன் கடை உரிமையாளரை தாக்கிய தி.மு.க., ஒன்றிய செயலாளர் கைது
டிபன் கடை உரிமையாளரை தாக்கிய தி.மு.க., ஒன்றிய செயலாளர் கைது
ADDED : ஜூன் 27, 2026 08:02 PM
பரங்கிப்பேட்டை: டிபன் கடை உரிமையாளரை தாக்கிய, தி.மு.க., ஒன்றிய செயலாளரை, போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வால்காரமேடு பகுதியை சேர்ந்தவர் பாலு, 61; தி.மு.க., கீரப்பாளையம் மத்திய ஒன்றிய செயலாளர். இவர், நேற்று முன்தினம் கீரப்பாளையத்தில் உள்ள ஒரு டிபன் கடை முன்பு, வடஹரிராஜபுரம் பகுதியை சேர்ந்த முருகனிடம், அவருக்கு தரவேண்டிய மோதிரத்தை கேட்டு தகராறுசெய்து கொண்டிருந்தார்.
அப்போது, டிபன் கடை உரிமையாளர் அருள், கடை எதிரே சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பாலு மற்றும் அவரது உறவினர் விஷ்ணு ஆகியோர் அருளை, தாக்கினர். மேலும், தடுக்க வந்த அருளின் மனைவி ஜெயந்தியை, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்த தகராறில், காயமடைந்த அருள் மற்றும் ஜெயந்தி இருவரும் சிகிச்சைக்காக, புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, ஜெயந்தி கொடுத்த புகாரின்பேரில், புவனகிரி போலீசார் வழக்குப்பதிந்து, பாலுவை கைது செய்தனர். விஷ்ணுவை தேடிவருகின்றனர்.
