/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சரவையில் அதிரடி மாற்றம் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கீடு
/
அமைச்சரவையில் அதிரடி மாற்றம் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கீடு
அமைச்சரவையில் அதிரடி மாற்றம் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கீடு
அமைச்சரவையில் அதிரடி மாற்றம் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கீடு
ADDED : ஆக 01, 2024 06:23 AM
புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு, அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் சந்திரபிரியங்கா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். பல மாதங்களாக புதிய அமைச்சர் நியமிக்கப்படாமல் இருந்தது.
மக்களவைத் தேர்தல் நெருங்கிய சூழலில் கடந்த மார்ச் மாதம் காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அவர், கடந்த மார்ச் 14ம் தேதி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அப்போதைய கவர்னர் தமிழிசை பதவிப் பிராணம் செய்து வைத்தார். வழக்கமாக அமைச்சர் பதவியேற்பு முடிந்ததும், அவருக்கான இலாகா ஒதுக்கப்பட்டு விடும். ஆனால், திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது.
சந்திரபிரியங்காவிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதி, தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு, கலை மற்றும் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட துறைகள் இருந்தன. அவர் நீக்கம் செய்யப்பட்ட பின், இந்த இலாகாக்கள் அனைத்தையும் முதல்வர் ரங்கசாமி கவனித்து வந்தார்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன், முதல்வர் ரங்கசாமி, கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.
அப்போது அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுங்குவது தொடர்பாக கடிதத்தை வழங்கினார். சில மணி நேரத்தில் அமைச்சர்கள் இலாகா மாற்றம் தொடர்பாக அரசாணை வெளியானது.
அதில் அமைச்சர் சாய்சரவணன்குமாரிடம் இருந்த குடிமை பொருள் வழங்கல் துறை பறிக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஆதிதிராவிடர் நலத் துறை ஒதுக்கப்பட்டது.
அவர் ஏற்கனவே கவனித்து வந்த தீயணைப்பு, சிறுபான்மையினர் நலம் ஆகிய துறைகளையும் அவர் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர் திருமுருகனுக்கு குடிமை பொருள் வழங்கல், வீட்டு வசதி வாரியம், கலை பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் அனைத்தும் முதல்வர் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சந்திரபிரியங்கா கவனித்த போக்குவரத்து, தொழிலாளர் ஆகிய துறைகளும், அமைச்சர் சாய்சரவணன் குமாரிடம் இருந்த டி.ஆர்.டி.ஏ., சமுதாய முன்னேற்றம், நகர மேம்பாட்டு சேவைகள் ஆகிய துறைகளையும் இனி முதல்வர் கவனிக்க உள்ளார்.
இதனால், முதல்வர் கவனிக்கும் துறைகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.