ADDED : மே 05, 2024 03:54 AM

புதுச்சேரி புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை இன்குபேஷன் சென்டரில் நடந்த, 'ட்ரோன்' செய்முறை பயிற்சியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் இயங்கிவரும் அடல் இன்குபேஷன் சென்டரில், கடந்த இரு தினங்களில், பள்ளி மாணவர்களுக்கு 'ட்ரோன்' செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
அடல் இன்குபேஷன் சென்டர் இயக்குநர் சுந்தரமூர்த்தி பயற்சி வகுப்பை துவக்கி வைத்து, 'ட்ரோன்' பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார். பயிற்சியில், 'ட்ரோன்கள்' பற்றிய அடிப்படைகள், அதில் இருக்கும் முக்கிய பாகங்கள், பயன்கள் பற்றி விளக்கப்பட்டது. மாணவர்கள் 'ட்ரோன்'களை தங்கள் கைகளால் வடிவமைத்து பறக்க செய்தனர்.
அடல் இன்குபேஷன் சென்டர் ஆராய்ச்சி பொறியாளர் ஹரிதர்ஷன், தொழில் நுட்பம் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை நிர்வாக அதிகாரி ராஜகுமார், மேலாளர் காமேஸ்வரன், செயல் திட்ட வடிவமைப்பாளர் உதயகுமார் செய்திருந்தனர். இதில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இது குறித்து அடல் இன்குபேஷன் சென்டரின் தலைமை செயல் அதிகாரி விஷ்ணு வரதன் கூறுகையில், 'பள்ளி மாணவர்களுக்கு கோடைவிடுமுறையில் இது போன்று பல பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம். இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.