அமைச்சர்களின் இலாக்கா தாமதம் குறித்து கவர்னர் விளக்கம் அளிக்க இ.கம்யூ., வலியுறுத்தல்
அமைச்சர்களின் இலாக்கா தாமதம் குறித்து கவர்னர் விளக்கம் அளிக்க இ.கம்யூ., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 27, 2026 06:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவையில் இலாக்கா தாமதம் குறித்து கவர்னர் விளக்கம் அளிக்க வேண்டும் என இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்துடன் தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடந்து சபாநாயகர், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தயாராகி வருகின்றன.
ஆனால் புதுச்சேரியில் முதல்வர், 5 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டனர்.ஆனால் அமைச்சர்களுக்கு இலக்காக்கள் பிரித்து கொடுக்கப்படவில்லை. இதனால் புதுச்சேரி அரசு நிர்வாகம் முடங்கிப்போய், மக்களுக்கான நல திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் உள்ளது.
பல்வேறு தரப்பினர்களின் விமர்சனங்களுக்கு பிறகு கடந்த 20ம் தேதி அமைச்சர்களின் இலாக்காகள் பட்டியலை கவர்னரிடம் முதல்வர் அளித்து, ஒரு வாரம் காலமாகியும் கவர்னர் அமைச்சர்களின் இலாக்காக்களை இதுவரை அறிவிக்கவில்லை.
அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்குவதில் முதல்வருக்கு முழு அதிகாரம் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மக்களின் ஜனநாயகம், தேர்தல் ஜனநாயகம், சட்டமன்ற ஜனநாயகம் அனைத்தும் பெரும் ஆபத்துக்குள்ளாகியுள்ளது. இது அரசியலமைப்புச் சட்ட கோட்பாடுகளுக்கு எதிரானது ஆகும். அமைச்சர்களின் இலாக்கா அறிவிப்பு செய்வதில் காலதாமதத்திற்கு கவர்னர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
