/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பெண் கல்வியில் தான், தேசத்தின் கல்வி அடங்கியுள்ளது' என்.எல்.சி., மனிதவள துறை இயக்குனர் சமீர் சுவருப் பேச்சு
/
'பெண் கல்வியில் தான், தேசத்தின் கல்வி அடங்கியுள்ளது' என்.எல்.சி., மனிதவள துறை இயக்குனர் சமீர் சுவருப் பேச்சு
'பெண் கல்வியில் தான், தேசத்தின் கல்வி அடங்கியுள்ளது' என்.எல்.சி., மனிதவள துறை இயக்குனர் சமீர் சுவருப் பேச்சு
'பெண் கல்வியில் தான், தேசத்தின் கல்வி அடங்கியுள்ளது' என்.எல்.சி., மனிதவள துறை இயக்குனர் சமீர் சுவருப் பேச்சு
ADDED : ஏப் 07, 2024 04:52 AM

புதுச்சேரி : பெண்களின் முன்னேற்றத்தில் தான் தேசத்தின் முன்னேற்றம் அடங்கியுள்ளது என, நெய்வேலி என்.எல்.சி., நிறுவன மனிதவள துறை இயக்குனர் சமீர் சுவருப் பேசினார்.
புதுச்சேரி இதயா கலை அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:
கல்லுாரி படிப்பின் முடிவில் பட்டங்கள் பெறுவது என்பது மாணவர்கள் வாழ்வில் மிக முக்கிய பகுதி. ஏனெனில் இவ்வளவு ஆண்டு காலம் படிப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சி, உழைப்பின் பிரதிபலனாக தான், பட்டம் கிடைக்கிறது.
இப்பட்டங்களை பெற, மாணவர்களின் பெற்றோரின் அர்ப்பணிப்பு, ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள், சிறப்பான பயிற்சி முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. நாம் பெறும் பட்டம் என்பது கல்வியின் முடிவு அல்ல. இது வாழ்வின் ஒரு துவக்கம். இந்த பட்டத்தின் மூலம் கிடைத்த கல்வி, நம் வாழ்வில் இனிமேல் எப்படி முன்னேற போகிறோம் என்பதற்கான ஒரு அச்சாணி என்று சொன்னாலும் மிகையல்ல.
இன்றைக்கு கல்வி என்பது விஞ்ஞானம் காரணமாக பல புதிய பரிமாணங்களை தொட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது தளங்களில், தொடர்ந்து கல்வி விரிவடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளிலும் கல்வியில் ஏற்படும் மாற்றத்தை நாம் அறிந்து கொள்வது அவசியம்.
நாம் படிக்கின்ற கல்வியையும், ஒழுக்க கல்வியும் ஒரு சேர பெறுகின்ற பட்சத்தில் அந்த கல்வி உண்மையான வாழ்க்கை கல்வியாக இருக்கும் என, காந்தி கூறியுள்ளார்.
நாம் பங்குசந்தை குறித்து படிப்பது, நிலங்களை அளவீடு குறித்து படிப்பது, இவை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒழுக்கமான கல்வியை பெறுவது. ஆகையால் பட்டமளிப்பு விழாவில் அளிக்கப்படுகின்ற பட்டங்கள் மிகவும் முக்கியமானவை. அதை பெறுகின்ற மாணவிகள் தகுதியானவர்கள்.
அதேநேரத்தில் உங்களை உச்சத்திற்கு அழைத்து வந்த உங்களுடைய பெற்றோர், ஆசிரியர்களை நினைவில் கொண்டு பெருமைப்படுத்த வேண்டும்.
நானும் இதைத்தான் செய்தேன். நானும் எனது படிப்பில் மூலம் எனது தாயாரை பெருமைப்படுத்தி உள்ளேன். நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் என் தாயாருக்கு பெருமை. குறைவாக மதிப்பெண் எடுத்தால் யாரிடம் சொல்லாதீங்க என்று தான் சொல்ல வேண்டி வரும். அதை உணர்ந்து தான் எப்போதும் சிறப்பாக படித்தேன். வாழ்வில் உயர்ந்தேன்.
நுால்கள் நம்மை வழிகாட்டுபவை. சில புத்தங்களை வாசிக்க வேண்டும். சில புத்தகங்களை உள்வாங்கிட வேண்டும். அந்தஅளவிற்கு சிறந்த கருத்துக்களுடன் புத்தகங்கள் உள்ளன.
இந்த புத்தக கல்வியை உங்களுடைய வாழ்வில் பயன்படுத்தக் கூடிய செய்முறை கல்வியாக, செயல்பாட்டு விளக்கங்களுடன் ஆசிரியர்கள் சொல்லி கொடுத்து இருக்கின்றனர். அதை முழுமையாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றைக்குமே உங்களை நீங்கள் குறைத்து மதிப்பிடக் கூடாது.
மாணவிகளே, உங்கள் குரலுக்கும், கருத்துக்கும் என்றுமே சக்தி உண்டு என்பதை நீங்கள் உணர வேண்டும்.
இதை உணர்ந்தால் நீங்கள் வாழ்வில் சிறப்பாக முன்னேற முடியும். பெண்களின் முன்னேற்றத்தில் தான் தேசத்தின் முன்னேற்றம் அடங்கியுள்ளது.
பெண்கள் கல்வியில் தான், தேசத்தின் கல்வியும் அடங்கியுள்ளது.
நீங்கள் முன்னேறும்போது, உங்களுடன் இணைந்து இந்த தேசமும் முன்னேறும்.
இவ்வாறு அவர் பேசினார்.

