ADDED : ஏப் 05, 2024 11:33 PM

பாகூர்: பாகூரில் உள்ள மின்துறை அலுவலகத்தின் கேட்டை இழுத்து மூடி, பொது மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர் பழைய காமராஜர் நகர், திருமால் நகர் உள்ளிட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு, பல ஆண்டுகளாக மின்சார பற்றாக்குறை இருந்து வருகிறது. வீடுகளில் உள்ள டி.வி., மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வந்தது. மின் பிரச்னையை சரி செய்யக்கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன், பாகூரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
அங்கிருந்து பழைய காமராஜர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை பாகூர் மின்துறை இளைநிலை பொறியாளர் அலுவலக அதிகாரியை சந்திக்க சென்றனர். அங்கு, அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில், பொது மக்கள் மின் துறை அலுவலக கேட்டை இழுத்து மூடி, மின்சார பிரச்னைக்கு உடனே தீர்வு காண கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மின் துறை அதிகாரியிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினர். மின் பற்றாக்குறையை விரைவில் சீரமைப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்த, பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

