50 சதவீத எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு.... சட்டம் இயற்றுங்கள்:அதிகாரிகளுக்கு முதல்வர் ரங்கசாமி அதிரடி உத்தரவு ; பிற மாநிலங்களை சுட்டிக்காட்டி ஆவேசம்
50 சதவீத எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு.... சட்டம் இயற்றுங்கள்:அதிகாரிகளுக்கு முதல்வர் ரங்கசாமி அதிரடி உத்தரவு ; பிற மாநிலங்களை சுட்டிக்காட்டி ஆவேசம்
UPDATED : ஜூலை 25, 2026 04:54 AM
ADDED : ஜூலை 24, 2026 09:43 PM

புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடு எட்டவில்லை.
புதுச்சேரி மாநிலத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லுாரி, மூன்று தனியார் மருத்துவக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. வழக்கமாக இந்த தனியார் மருத்துவக் கல்லுாரிகள் ஆண்டுதோறும் தங்களின் மொத்த இடங்களிலிருந்து 37 சதவீதம் வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக வழங்கி வருகின்றன.
இதன் மூலம் கடந்த ஆண்டு 255 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு ஒதுக்கீடாக கிடைத்தன. தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., இடங்களை முடிவு செய்வதற்கான பேச்சுவார்த்தை சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு தரப்பில் சுகாதாரத்துறை செயலர் முகமது யாசின், சார்பு செயலர் சவுமியா, சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், இணை இயக்குநர் ஜோசப்பின் சித்ரா ஆகியோரும், மறுபுறம் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
கல்லுாரிகள் தயக்கம்:: கூட்டம் தொடங்கியதிலிருந்து மிகவும் உறுதியான நிலைப்பாட்டில் இருந்த முதல்வர் ரங்கசாமி, நீட் தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ள தற்போதைய சூழலைச் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே 37 சதவீதம் வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களை தந்து வருகிறீர்கள். இந்த முறை கட்டாயம் 40 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக தர வேண்டும் என்று தனியார் மருத்துவக் கல்லுாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த தனியார் மருத்துவக் கல்லுாரி பிரதிநிதிகள், உட்கட்டமைப்பு மற்றும் பேராசிரியர் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கல்லுாரிகள் நிதி நெருக்கடியில் நடத்தப்பட்டு வருவதாகவும், எனவே இந்த முறை அரசு ஒதுக்கீட்டு இடங்களை குறைத்துக் கொடுக்கலாமா என்று நிர்வாகங்கள் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
முதல்வர் டென்ஷன்:: தனியார் கல்லுாரிகளின் இந்தக் கருத்தைக் கேட்டதும் முதல்வர் ரங்கசாமி கடும் டென்ஷன் அடைந்தார். புதுச்சேரியில் முதலில் மருத்துவ கல்லுாரியை ஆரம்பிக்கின்றீர்கள். அதன் பிறகு அண்டை மாநிலங்களில் உங்களுடைய கல்லுாரிகளை விரிவுபடுத்தி விடுகின்றீர்கள். அப்படி விரிவுப்படுத்தும்போது அங்குள்ள மாநிலங்களுக்கு 50 சதவீத இடங்களை தருகின்றீர்கள்.
ஆனால் உங்கள் கல்லுாரியின் தொடக்கப் புள்ளியான புதுச்சேரி மாணவர்களுக்கு மட்டும் 50 சதவீத இடங்களை வழங்க தயங்குவது ஏன் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு தனியார் பிரதிநிதிகள், இந்த விஷயத்தில் எங்களால் உடனடியாக முடிவினைச் சொல்ல முடியாது, நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து முடிவினை சொல்வதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டதும் முதல்வர் ரங்கசாமியின் கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். இது போன்ற முக்கியமான பேச்சுவார்த்தைக்குக் கல்லுாரியின் நிர்வாக பொறுப்புகளில் இருப்பவர்கள் வர மாட்டார்களா.. அவர்களிடம் சொல்வதற்கு நீங்கள் எதற்காக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறீர்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்த முறை கட்டாயமாக 40 சதவீத இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்குத் தர வேண்டும். இல்லையெனில், தனியார் மருத்துவக் கல்லுாரிகள் 50 சதவீத எம்.பி.பி.எஸ்., இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீடாகத் தர வேண்டும் என்று சட்டம் தாக்கல் செய்து அமல்படுத்தப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பக்கம் திரும்பிய முதல்வர் ரங்கசாமி, அடுத்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தனியார் கல்லுாரிகள் 40 சதவீத இடங்களைத் தருகின்றனவா என்பதைப் பாருங்கள். இல்லையென்றால் உடனடியாக 50 சதவீத இடங்களைப் பெறுவதற்கான சட்ட வரைவை தயாரிப்பதற்கான சரத்துகளைத் தயார் பண்ணுங்கள் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனால் தனியார் மருத்துவக் கல்லுாரிகளுடன் நடத்தப்பட்ட முதற்கட்டப் பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனையடுத்து, வரும் 27ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
