/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செங்கல் சூளை பள்ளங்களால் விவசாயிகள் கடும் அவதி
/
செங்கல் சூளை பள்ளங்களால் விவசாயிகள் கடும் அவதி
ADDED : செப் 15, 2024 07:12 AM
புதுச்சேரி: திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செங்கல் சூளைக்காக அரசின் அனுமதியை விட அதிக அளவில் பள்ளம் எடுக்கப்படுவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக பகுதிகளான கொடுக்கூர், முட்ராம்பட்டு, வழுதாவூர், வம்புப்பட்டு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் செங்கல் சூளைத் தொழில் அதிக அளவில் நடந்து வருகிறது.
இந்த சூளைகளில் செங்கல் தயாரிப்புக்காக நிலத்தில் 4 அடி ஆழம் வரை மட்டுமே பள்ளம் தோண்டி மண் எடுக்க வருவாய் துறை அனுமதி அளித்துள்ளது.
ஆனால், அரசின் அனுமதியை மீறி 10 அடி வரை பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை எடுத்து செங்கல் சூளைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அதிக ஆழத்திற்கு பள்ளம் எடுக்கப்படுவதால், அதன் அருகேயுள்ள விவசாய நிலங்களில் மண் சரிவு ஏற்படுவதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட வருவாய் அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், மழைக்காலங்களில் அதிக ஆழத்திற்கு எடுக்கப்படும் பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், அவ்வழியாக செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகையால், வருவாய்துறையினர் செங்கல் சூளை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அரசு அனுமதியை மீறி அதிக அளவில் பள்ளம் எடுக்கும் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.