/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்சார டவர் அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் கைது
/
மின்சார டவர் அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் கைது
ADDED : ஆக 18, 2024 05:05 AM

பாகூர், : பாகூர் பகுதியில் விளை நிலத்தின் வழியாக மின்சார டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை, போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புறவழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக வயல்வெளி பகுதியில் இருந்த மின் வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது.
நெய்வேலியில் இருந்து புதுச்சேரிக்கு வரும் உயர்மின் அழுத்த டவர் லைன் மாற்றி அமைக்க பாகூர் -பின்னாட்சிக்குப்பம் பகுதியில் புறவழிச்சாலை பகுதியில் உள்ள நிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சர்வே நடந்தது.
இதற்கு, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, உரிய இழப்பீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், டவர் லைன் பணி தடைபட்டதால், புறவழிச்சாலை பணி பாதித்தது.
நேற்று காலை பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், நில அளவை பிரிவு அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள், பாகூர் - பின்னாட்சிக்குப்பம் பகுதியில் சர்வே செய்து, மின்சார டவர் லைனை மாற்றி அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
இதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நாங்கள் ஏற்கனவே கொடுத்த மனு குறித்து எந்த பதிலும் அளிக்காமல், நிலத்தை எடுக்க கூடாது என, கூறி சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து, நிலத்தில் சர்வே செய்யப்பட்டு, பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி டவர் லைன் மாற்றி அமைக்கும் பணிகள் துவங்கியது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

