ADDED : ஜூன் 15, 2026 05:21 PM

புதுச்சேரி: செட்டிப்பட்டு ஏரிக்கரையில் விவசாய நிலங்களுக்கு செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு ஏரிக்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பரளவில் நெல், கரும்பு, சவுக்கை உள்ளிட்டவைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதிக்கு திருக்கனுார் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தின் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செட்டிப்பட்டு ஏரிக்கரை வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் மின்கம்பிகள், போதிய பராமரிப்பு இல்லாததால் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால், லேசான காற்று வீசினாலே, மின்கம்பிகளில் ஏற்படும் உராய்வு காரணமாக டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு, பல மணி நேரம் மின்தடை நிலவுகிறது.
மேலும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விவசாயிகள் விளை பொருட்கள் மற்றும் உரங்களை வாகனங்களின் மூலம் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, செட்டிப்பட்டு ஏரிக்கரை விவசாய நிலங்களுக்கு மத்தியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உடனடியாக சீரமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
