/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன்கார்டு சேவைகளுக்கு கட்டணம் நிர்ணயம்: ஆன்லைனில் இனி விண்ணப்பிக்கலாம்
/
ரேஷன்கார்டு சேவைகளுக்கு கட்டணம் நிர்ணயம்: ஆன்லைனில் இனி விண்ணப்பிக்கலாம்
ரேஷன்கார்டு சேவைகளுக்கு கட்டணம் நிர்ணயம்: ஆன்லைனில் இனி விண்ணப்பிக்கலாம்
ரேஷன்கார்டு சேவைகளுக்கு கட்டணம் நிர்ணயம்: ஆன்லைனில் இனி விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 25, 2024 05:27 AM
புதுச்சேரி: குடிமை பொருள் வழங்கல் துறையின் சேவைகள் அனைத்தும் எளிமைப்படுத்தப்பட உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 1,67,353 மஞ்சள் ரேஷன் கார்டுகள், 1,86,397 சிவப்பு ரேஷன் கார்டுகள் என, மொத்தம் 3,50,750 ரேஷன்கார்டுகள் உள்ளன. பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு, புதிய ரேஷன் கார்டு தேவைக்காக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறையை பொதுமக்கள் நாடுகின்றனர். அத்துறை வளளாகத்தில் அவ்வளவு சுலபத்தில் சேவைகள் கிடைப்பதில்லை.
அப்படியே நடையாய் நடந்தாலும் உடனடியாக சேவைகள் கிடைத்துவிடாது. இதனிடையே குடிமை பொருள் வழங்கல் துறையில் உள்ள 9 ரேஷன் கார்டுகள் சேவைகளை எளிமைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சேவைகளை பெற குடிமை பொருள் துறைக்கு நேரில் சென்று விண்ணப்பிக்காமல் இனி, பொது சேவை மையங்கள் மூலமாகவே எளிதாக விண்ணப்பிக்க முடியும். இதற்கான கட்டணம் ஐ.டி., துறை வாயிலாக நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வளவு
பொது சேவை மையம் மூலமாக 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஒரு பெயரை சேர்க்க 60 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கும் ஒரு பெயரை சேர்க்க இதேபோல் 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர் நீக்கம், ரேஷன் கார்டு சரண்டர், ஆதார் எண் இணைப்பு, டூப்ளிகேட் ரேஷன் கார்டுகள் பெற 30 ரூபாய் விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பயனாளிகள் பெயர் மாற்றத்திற்கு 60 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணம் நிர்ணயம் குடிமை பொருள் வழங்கல் துறை, பொதுசேவை மையம், டில்லியில் உள்ள பொதுசேவை மைய சொசைட்டி, ஐ.டி., துறையின் கீழ் உள்ள புதுச்சேரி மின் ஆளுகை, கலெக்டர் கீழ் உள்ள மாவட்ட மின்ஆளுகை என ஐந்து தளங்களில் பங்கிடப்பட உள்ளது. உதாரணமாக, ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க 60 ரூபாய் வசூலித்தால், அதில் 15 ரூபாய் குடிமை பொருள் வழங்கல் துறைக்கு செல்லும். பொது சேவை மையங்களுக்கு 24 ரூபாய், புதுச்சேரி மின் ஆளுகை அமைப்பிற்கும் 9 ரூபாய் செல்லும். தவிர டில்லியில் உள்ள பொதுசேவை சொசைட்டி, மாவட்ட மின்-ஆளுகை தலா 6 ரூபாய் பங்கிட்டு கொள்ளும்.
மாவட்ட மின்-ஆளுகை திட்டத்தின் கீழ், ஏற்கனவே 11 அரசு துறைகளின் 72 சேவைகள் பொது சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இப்போது 73 சேவையாக குடிமை பொருள் வழங்கல் துறையின் ரேஷன்கார்டு விண்ணப்ப சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. போதிய ஆட்கள் இல்லாமல், இடவசதியும் இல்லாமல், குவியும் பொதுமக்களின் மனுக்களை சமாளிக்க முடியாமல் குடிமை பொருள் வழங்கல் துறை திணறி வந்த சூழ்நிலையில், பொது சேவை வாயிலாக விண்ணப்பிக்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்றுள்ளனர்.