பஸ் நிறுத்த எல்.இ.டி., தகவல் பலகை கட்டுப்பாட்டு பெட்டியில் தீ விபத்து
பஸ் நிறுத்த எல்.இ.டி., தகவல் பலகை கட்டுப்பாட்டு பெட்டியில் தீ விபத்து
ADDED : ஆக 02, 2026 08:00 PM
புதுச்சேரி: ஆம்பூர் சாலை அரசு மருத்துவமனை சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் உள்ள எல்.இ.டி., தகவல் பலகையின் கட்டுப்பாட்டு பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, ஆம்பூர் சாலை அரசு மருத்துவமனை சந்திப்பில் போக்குவரத்து துறை மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகள், எல்.இ.டி., தகவல் பலகையுடன் கூடிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 7:45 மணிக்கு அந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள எல்.இ.டி., தகவல் பலகையின் கட்டுப்பாட்டு பெட்டியில் மின் கசிவு காரணமாக திடீரென தீ பிடித்து கரும் புகை வெளியேறியது.
இதைகண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் புதுச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி சரவணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும், எல்.இ.டி., தகவல் பலகையின் கட்டுப்பாட்டு பெட்டி முழுதும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து குறித்து பெரியக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
