ராணுவ விளையாட்டு பள்ளியில் புதுச்சேரி மாணவருக்கு இடம்
ராணுவ விளையாட்டு பள்ளியில் புதுச்சேரி மாணவருக்கு இடம்
ADDED : ஆக 02, 2026 08:13 PM
வில்லியனுார்: கூடப்பாக்கம் ஹாக்கி குழுவை சேர்ந்த மாணவருக்கு பெங்களூரு ராணுவ விளையாட்டு பள்ளியில் இடம் கிடைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் (எம்.இ.சி) எனப்படும் ஆர்மி ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் உள்ளது. இது இந்திய ராணுவத்தின் மூலம் நேரடியாக நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளியாகும். இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காக நாடு முழுதும் விளையாட்டில் சாதனை படைத்துவரும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு கடந்த மாதம் நடந்தது.
அதில் வெற்றி பெறும் மாணவர்கள் ராணுவ பள்ளியில் சேர்க்கப்படுவர். இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய ராணுவத்தில் பல்வேறு துறைகளில் நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். நடப்பு கல்வி ஆண்டில் நடந்த தேர்வில் நாடு முழுதும் 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த தென்னிந்தியாவில் இருந்தே இருவர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். அதில், ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் கோனேரிக்குப்பம், அண்ணா நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பச்சையப்பன் மகன் விமல், 14, என்பவர் தேர்வாகி உள்ளார். இவர் கூடப்பாக்கம் ஹாக்கி கிளப்பில் சேர்ந்து மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகள் படைத்துள்ளார். ராணுவ விளையாட்டு பள்ளிக்கு தேர்வான மாணவர் விமலுக்கு கூடப்பாக்கம் ஹாக்கி குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
