/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'2026 தேர்தலில் காங்., ஓடும் வண்டியா, ஓடாத வண்டியா என பார்க்கலாம்' மாஜி முதல்வர் நாராயணசாமி பதிலடி
/
'2026 தேர்தலில் காங்., ஓடும் வண்டியா, ஓடாத வண்டியா என பார்க்கலாம்' மாஜி முதல்வர் நாராயணசாமி பதிலடி
'2026 தேர்தலில் காங்., ஓடும் வண்டியா, ஓடாத வண்டியா என பார்க்கலாம்' மாஜி முதல்வர் நாராயணசாமி பதிலடி
'2026 தேர்தலில் காங்., ஓடும் வண்டியா, ஓடாத வண்டியா என பார்க்கலாம்' மாஜி முதல்வர் நாராயணசாமி பதிலடி
ADDED : பிப் 22, 2025 10:31 PM
புதுச்சேரி : வரும் 2026 தேர்தலில் காங்., ஓடும் வண்டியா, ஓடாத வண்டியா என்று பார்க்கலாம் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை மாநிலங்களில் திணிப்பதற்கான வேலையை செய்து வருகிறது. இதை பல மாநிலங்கள் ஏற்கவில்லை. ஆனால், என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி, மத்திய அரசுக்கு அடிப்பணிந்து அவசர அவசரமாக மும்மொழி கொள்கையை ஏற்று இந்தி திணிப்பை ஆதரித்திருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை கொண்டு வந்து மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியிருக்கின்றனர். தமிழகத்திற்கு மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் கல்வித்திட்ட நிதியை கொடுக்க முடியாது என, மத்திய அமைச்சர் பேசுகிறார். கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. மாநில அரசு ஏற்றுக் கொண்டால் தான் மத்திய அரசு கல்வித்திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர முடியும்.
தவளக்குப்பம் தனியார் பள்ளியில் சிறுமிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலை அரசு மூடி மறைக்க முயற்சித்தது. போலீசாரும் உடந்தையாக இருந்தனர். அதற்காக தான் வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளோம்.
இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்பதில் அரசு நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. முதல்வர் டில்லி சென்று பிரதமரை சந்தித்தால் தான் புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதியை பெற முடியும்.
பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி கடன் முழுதும் ரத்து செய்யப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது கல்விக் கடனை வட்டியுடன் செலுத்தகோரி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் நோட்டீஸ் வந்துள்ளது. இதுபோன்று, வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது.
உள்துறை அமைச்சர் கடந்த ஆட்சி புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டி, தற்போது குற்றங்கள் குறைந்துள்ளதாக கூறியுள்ளார். எங்கள் ஆட்சியில் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி கவர்னராக இருந்தார். அவர் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகளவில் நடந்திருந்தால் விட்டு வைத்திருப்பாரா? எங்கள் ஆட்சியில் ரவுடிகளை கட்டுக்குள் வைத்திருந்தோம்.
தமிழகம், புதுச்சேரியில் நிதி வழங்குவதில் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க., தலைமையில் இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. புதுச்சேரியில் காங்., தலைமையில் இண்டியா கூட்டணி உள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தனித்து போட்டியிட விரும்பலாம். ஆனால் கட்சித்தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும்.
காங்., ஓடும் வண்டியா, ஓடாத வண்டியா என்று வரும் 2026 தேர்தலில் பார்க்கலாம், என்றார்.

