அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஜூலை 31, 2026 07:12 PM
புதுச்சேரி: காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அவரது அறிக்கை;
1924ல் கர்நாடகாவுக்கும், தமிழகத்திற்கும் உருவான ஒப்பந்தத்தால் கர்நாடகம் கே.ஆர்.எஸ்., அணை கட்டிக்கொண்டது. தமிழகம் மேட்டூர் அணை கட்டியது. அதன் பிறகு காவிரி நீர் தொடர்பாக பல சிக்கல்கள் தோன்றின. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு காவிரியில் நமக்கான உரிமையை உச்சநீதிமன்றமும், காவிரி நதி நீர் மேலாண்மை வாரியமும் நிலை நாட்டின.
ஆனால் அதன் பயனை ஒவ்வொரு ஆண்டும் அடைவதற்கு தமிழகமும், புதுச்சேரியும் படாத பாடு பட்டு வருகின்றன. இந்நிலையில் மேகதாது இடத்தில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டப் போவதாக தொடர்ந்து பேசி வருவது மாநில உரிமைகளை மீண்டும் பாதித்து வருகிறது.
மேல் மடை பகுதிகளில் கர்நாடகம் அனுபவிக்கும் அதே நதி நீர் உரிமை, கீழ்மடை பகுதிகளான தமிழகம், புதுச்சேரிக்கும் உண்டு. அதன்படி தான் தி.மு.க., தலைவர் இதுவரை தமிழக உரிமையை மீட்டெடுத்து தமிழகம் புதுச்சேரிக்கு நன்மை செய்து வந்தார். இப்போது த.வெ.க., அரசு கர்நாடக காங்., கூட்டு சதி செய்து அரசியல் நாடகத்தையும் சேர்த்து நடத்தி வருகிறது. தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் த.வெ.க., அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
அதே போல புதுச்சேரி அரசும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி நீர் காரைக்காலுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
