ADDED : ஜூலை 16, 2026 07:32 PM

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் நோயிலிருந்து விடுதலை என்ற பெயரிலான ஒரு மாத கால சிறப்பு மருத்துவப் பிரசாரம் தொடங்கப்பட்டது.
அதனையொட்டி, ஜிப்மர் வளாகத்தில் இலவச மருத்துவ சுகாதார அட்டை பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பிரசாரத்தை ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி தொடங்கி வைத்து பேசுகையில், ‘நோய்கள், மருத்துவச் செலவுகளால் ஏற்படும் பொருளாதாரச் சுமை மற்றும் தரமான சிகிச்சை பெறுவதில் உள்ள தடைகளிலிருந்து மக்களை விடுவிப்பதே இப்பிரசாரத்தின் நோக்கம்.
பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது குடும்பத்தினர் மற்றும் குறிப்பாக மூத்த குடிமக்களை பதிவு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் தொடர்பான சுகாதார அட்டைகளை விரைவாகவும் இலவசமாகவும் வழங்குவதாகும். இத்திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் ஆயுஷ்மான் வய் வந்தனா சுகாதார அட்டைகள் உடனடியாகப் பதிவு செய்து வழங்கப்படுகின்றன. அடுத்த மாதம், 15ம் தேதி ஜிப்மர் வளாகத்தில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பதிவு மையங்களை தினமும் காலை 6.30 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அணுகலாம்.
தேவையான ஆவணங்கள்:: ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் ஓ.டி.பி., சரிபார்ப்புக்காக ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுடன் எடுத்து வர வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 8903824770 அல்லது 0413-2297004 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
