/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விமான நிலையம் எதிரே குப்பை குவியல்; அரசியல் கட்சியினரால் சுகாதார சீர்கேடு
/
விமான நிலையம் எதிரே குப்பை குவியல்; அரசியல் கட்சியினரால் சுகாதார சீர்கேடு
விமான நிலையம் எதிரே குப்பை குவியல்; அரசியல் கட்சியினரால் சுகாதார சீர்கேடு
விமான நிலையம் எதிரே குப்பை குவியல்; அரசியல் கட்சியினரால் சுகாதார சீர்கேடு
ADDED : ஏப் 17, 2024 07:54 AM

புதுச்சேரி : பொதுமக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய அரசியல் கட்சியினர், லாஸ்பேட்டை விமானம் நிலையம் எதிரில் குப்பைகளை வீசி விட்டு சென்றனர்.
காங்., பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் மதியம் 1:20 மணிக்கு வந்தார். அதே நாளில், 'ரோடு ேஷா' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மாலை 5:30 மணியளவில் வந்தார்.
தேசிய தலைவர்களை வரவேற்பதற்காக, இரு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் விமானம் நிலையம் எதிரே ஆயிரக்கணக்கில் திரண்டனர். இவர்களுக்கு வாட்டர் பாட்டில், கூல் ட்ரிங்க்ஸ், ஸ்நாக்ஸ் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் காலி வாட்டர் பாட்டில், கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவற்றை விமான நிலையம் எதிரிலேயே பொறுப்பில்லாமல் வீசி எறிந்துவிட்டு சென்றனர். இதனால், விமானம் நிலையத்தை சுற்றிலும் குப்பையும், கூளமுமாக காட்சியளிக்கிறது.
விமான நிலையத்துக்கு பக்கத்தில் உள்ள லாஸ்பேட்டை மைதானத்தில் காலை, மாலை என இருவேளைகளிலும் பொதுமக்கள் 'வாக்கிங்' செல்கின்றனர். உடற்பயிற்சிகள் செய்யவும், விளையாட்டு பயிற்சி எடுக்கவும் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் வருகின்றனர்.
இந்த பகுதி முழுவதும் குப்பைகள் சிதறி கிடப்பது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனால், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. தங்கள் தலைவர்களுக்கு வரவேற்பு அளிப்பது தவறு இல்லை. ஆனால், சாப்பிட்ட பொருட்களை தாறுமாறாக வீசிவிட்டு செல்வது சரியான நடைமுறை அல்ல.
லாஸ்பேட்டை விமான நிலையம் எதிரிலும், விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் சிதறி கிடக்கும் குப்பைகளை சம்பந்தப்பட்ட காங்., பா.ஜ., ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும்.
இதன் மூலமாக, பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

