மாநில உரிமைகளுக்கான போராட்டம் தொடரும்: முதல்வர் ஸ்டாலின்
மாநில உரிமைகளுக்கான போராட்டம் தொடரும்: முதல்வர் ஸ்டாலின்
ADDED : நவ 21, 2025 10:48 AM

சென்னை: மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக்கான எங்கள் போராட்டம் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய அரசியல் சட்டத்தை திருத்தும் வரை ஓய்வில்லை. ஏப்ரல் 8ம் தேதி தமிழக அரசு பெற்ற தீர்ப்புக்கு எந்த பாதிப்பையும் சுப்ரீம் கோர்ட் கருத்து ஏற்படுத்தாது. மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக்கான எங்கள் போராட்டம் தொடரும். சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் மாநிலத்தின் டிரைவர் இருக்கையில் அமர வேண்டும் என்பது தெளிவாகி உள்ளது.
மாநிலத்தின் 2 ஆட்சி அதிகாரங்கள் இருக்க முடியாது என்பதையும் உறுதிபடுத்தி உள்ளது. தேர்த்தெடுக்கப்பட்ட அரசுடன் முரண்படும் கவர்னர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசியல் சட்ட ரீதியிலான அமைப்புகள், அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும், அதை மீறி செயல்படக் கூடாது. மாநில சட்டசபை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை நீர்த்துப்போகச் செய்ய கவர்னருக்கு 4வது வாய்ப்பு எதுவும் கிடையாது.
மாநில அரசு ஒப்புதலுக்கு அனுப்பும் மசோதாவை ரத்து செய்யும் அதிகாரமும் கவர்னருக்கு கிடையாது. எந்த வித விளக்கமும் இன்றி காரணமும் இன்றி மசோதாவை தாமதப்படுத்தினால் அதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட் செல்ல மாநிலங்களுக்கு உரிமை உள்ளது. வேண்டுமென்றே கவர்னர்கள் தாமதப்படுத்தினால் அதற்கு அவர்கள் பதில் கூறியாக வேண்டும். அரசியல் சட்ட ரீதியிலான அமைப்புகள், அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். அதை மீறி செயல்பட கூடாது.
மசோதாவுக்கு தடை ஏற்படுத்தும் கவர்னரின் செயலை நீதிமன்றம் ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது. அரசியல் சட்ட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது என்பதை தமிழக அரசின் சட்டப்போராட்டம் தெளிவுபடுத்தி உள்ளது. அரசியல் சட்டரீதியான எந்த அமைப்பும் நாட்டின் அரசியல் சட்டத்தை விட உயர்ந்ததல்ல. அரசியல் சட்ட ரீதியான மிக உயர்ந்த அமைப்பு சட்டத்தை மீறும் போது நீதிமன்றங்கள் தான் ஒரே நிவாரணம். நீதிமன்றங்களின் கதவை அடைத்தால் சட்ட ரீதியான ஜனநாயகத்தின் சட்டத்தின் ஆட்சி முடக்கப்பட்டுவிடும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

