/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிராமப்புறங்களில் விஸ்வரூபம் எடுக்கும் குப்பை பிரச்னை
/
கிராமப்புறங்களில் விஸ்வரூபம் எடுக்கும் குப்பை பிரச்னை
கிராமப்புறங்களில் விஸ்வரூபம் எடுக்கும் குப்பை பிரச்னை
கிராமப்புறங்களில் விஸ்வரூபம் எடுக்கும் குப்பை பிரச்னை
ADDED : மார் 09, 2025 03:33 AM

பல நாட்களாக அகற்றாததால் சுகாதார சீர்கேடு
கிராமப்புறங்களில் பல நாட்களாக குப்பை அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் விதமாக, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, வீடு வீடாக சென்று மக்கும், மக்காத குப்பை என தரம்பிரித்து சேகரித்து வாகனத்தின் மூலம் குருமாம்பேட் குப்பை குடங்கிற்கு கொண்டு செல்லவும், அங்கு தரம் பிரித்து உடனுக்குடன் உடன் அகற்ற அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது.
இதற்காக ஒரு டன் குப்பை சேகரித்து கொண்டு வரும் நிறுவனத்திற்கு ரூ. 3,000 வீதம் வழங்கி வருகிறது. நகர பகுதியில் தினந்தோறும் குப்பைகள் அகற்றப்படுகிறது. ஆனால், கிராமப்புறங்களில் குப்பைகள் சரிவர அள்ளுவது கிடையாது. வாரத்திற்கு ஒரு நாள் என்ற முறையில் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
இதனால் கிராமப்புறங்களில் ஆங்காங்கே டன் கணக்கில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. குப்பை அள்ள ஒப்பந்தம் பெற்ற நிறுவனம், துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் துப்பரவு பணியாளர்கள் வருவதில்லை.
குப்பை அள்ளும் வாகனங்களும் குறைவாக இருப்பதால் குப்பை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தினசரி 150 டன் குப்பை கொண்டு வர வேண்டிய நிறுவனம், தற்போது தினசரி 50 முதல் 60 டன் மட்டுமே குருமாம்பேட் குப்பை கிடங்கிற்கு கொண்டு வருகிறது. மீதமுள்ள குப்பைகள் கிராமப்புறங்களிலே சாலையோரம் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
துாய்மை பணியாளர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க கோரி அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளுக்கு சென்று முறையிட்டும், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் குப்பை அகற்றாத பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருவதால் வரும் சட்டசபை கூட்ட தொடரில் எதிரொலிக்கும்.
துப்புரவு பணியாளர்கள் கூறுகையில், 'கடந்த நவ., மாதம் முதல் சம்பளம் வழங்கவில்லை. மாதந்தோறும் இ.எஸ்.ஐ., பி.எப்.,க்கு பணம் பிடித்தம் செய்தனர். ஆனால், இ.எஸ்.ஐ., பி.எப்., கணக்கு கேட்டால் வேலைக்கு வர வேண்டாம் என, துரத்துகின்றனர். செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்காததால் வீட்டு வாடகை, தினசரி செலவுக்கு பணம் இன்றி சிரமப்படுகிறோம்' என்றனர்.