ADDED : ஆக 17, 2024 02:54 AM

திருக்கனுார்: புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் 2ம் நாள் கலை விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை, தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் மூன்று நாள் புதுச்சேரி கலை விழா செட்டிப்பட்டு திரவுபதி அம்மன் கோவில் திடலில் நேற்று முன்தினம் துவங்கியது.
இரண்டாம் நாளான நேற்று கிராமிய இசைக்குழு அஞ்சாலாட்சி குழுவினரின் நாட்டுப்புற இசை, இமாசலப் பிரதேசம் நாட்டி நடனம், தமிழ்நாடு பெரிய மேளம், புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் அன்பு நிலவன் குழுவினரின் தற்காப்பு கலைகள் மற்றும் சிலம்பாட்டம், கலைமாமணி ராஜாராம் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது.
இதேபோல், புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல், லாஸ்பேட்டை காமராஜர் மணிமண்டபம், தொண்டமாநத்தம் சமுதாய நலக்கூடம் அருகில், கரிக்கலாம்பாக்கம் அரசு கலையரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு கலை விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடந்தன.
முன்னதாக, செட்டிப்பட்டில் நடந்த கலைவிழாவில், திருக்கனுார், செட்டிப்பட்டு கிளை நுாலகத்தில் பயின்று, சமீபத்திய புதுச்சேரி ஊர்காவல் படை வீரர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு, சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் 5 இடங்களில் நடந்து வரும் மூன்று நாள் அரசு கலை விழா இன்று 17ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

