திட்ட இயக்குநர் தற்கொலை முயற்சி நீதி கேட்டு அரசு டாக்டர்கள் போராட்டம்
திட்ட இயக்குநர் தற்கொலை முயற்சி நீதி கேட்டு அரசு டாக்டர்கள் போராட்டம்
ADDED : ஜூன் 28, 2026 04:10 PM
புதுச்சேரி: எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் தற்கொலை முயற்சிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு டாக்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் அருள் விசாகன். இவர், தற்போது துறையில் நடந்த சில முறைகேடு தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், திட்ட இயக்குநர் மற்றும் அவரது குடும்பத்தினரை விமர்சித்து கடந்த 25ம் தேதி சிலர் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டனர்.
அதில் மனமுடைந்த அருள்விசாகன் கடந்த 25ம் தேதி இரவு துாக்க மத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் தற்கொலை முயற்சிக்கு காரணமாகவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கடந்த 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, நீதி கேட்டு தொடர் போராட்டம் அறிவித்தனர்.
இதனை வலியுறுத்தி நேற்று முன்தினம் கவர்னர் கைலாஷ்நாதனிடம் மனு அளித்தனர். நேற்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுச்சேரி, இந்திரா காந்தி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அடையாளப் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு, சங்கத் தலைவர் அன்புசெந்தில் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், ஸ்ரீதரன், இளம்பரிதி, அரசு டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் நடந்த முறைகேடு சம்பவங்கள், அதில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும். அருள் விசாகன் தற்கொலை முயற்சிக்கு காரணமாகவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறை இயக்குநரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் விதிமீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் , நேர்மையான அதிகாரிகள் நிம்மதியாக பணிபுரியும் சூழலையும் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
