சுற்றுலா பயணிகளை ஏற்றுவதில் விதி மீறல் போட் உரிமையாளர் மீது நடவடிக்கை கடலோர காவல்படை போலீசார் அதிரடி
சுற்றுலா பயணிகளை ஏற்றுவதில் விதி மீறல் போட் உரிமையாளர் மீது நடவடிக்கை கடலோர காவல்படை போலீசார் அதிரடி
ADDED : ஜூன் 28, 2026 04:00 PM
புதுச்சேரி: விதிமுறைகளை மீறி போட்டில் சுற்றுலா பயணிகளை ஏற்றிசென்ற உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் தியாகராஜன், சுற்றுலா துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் கடலின் அழகை ரசிக்கும் வகையில் கடலோர பகுதியில் போட்டில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் போட்டில் விதிமுறைகளை மீறி சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் சுற்றுலாத்துறையினர் ஆய்வு செய்து 5 போட் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், நேற்று உப்பளம் துறைமுகத்தில் சுற்றுலா பயணிகளை ஒரு போட்டில் விதிமுறைகளை மீறி அதிக நபர்களை ஏற்றிசெல்வதாக கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் கடலோர போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரு போட்டியில் விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த போட் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர் தியாகராஜன், சுற்றுலாத்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்தார். சுற்றுலா தளங்களில் கடலோர காவல்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
